- slide, தற்போதைய செய்திகள், புராண பெரியோர்கள்

செய்யும் தொழிலே தெய்வம் எப்படியும் காப்பாத்தும்.!!

Spread the love

பதிவிரதைக்கு முன் யோகியும் துரும்பே (மஹாபாரதக் கிளைக் கதை)

.

.

.

.

.

“கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?” என்ற வாக்கியமானது பழமொழியைப் போல மிகவும் புகழ் பெற்றது.

அதற்குக் காரணமான கதை இதோ:
கௌசிகன் என்ற அந்தணர் காட்டில் கடுந்தவம் செய்தார். நெடுநாள் செய்த தவம் பலித்துக் கண் விழித்தார்.
அப்போது மரத்திலிருந்த கொக்கு அவர் தலையில் எச்சமிட்டது.
கோபம் பொங்க கொக்கைப் பார்த்தார். கொக்கு தீப்பற்றி எரிந்து செத்தது.
ஆஹா! நம் தவம் சித்தியாகி விட்டது’ என்கிற வெற்றிக் களிப்புடன் ஊருக்குள் சென்றவர், பசித்ததால் ஒரு பெண்ணிடம் உணவு கேட்டார். அவள் உட்காருங்கள் சுவாமி! உணவு கொண்டு வருகிறேன்! என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள். பின்னர் கணவன், மாமனார், மாமியாருக்குப் பணிவிடைகளைச் செய்துவிட்டு முனிவருக்கு உணவு கொண்டு வந்தாள்.
கௌசிகனுக்கோ கடும் கோபம் வந்தது. தன் தவ வலிமையின் கர்வத்தால் அப்பெண்ணைக் கண்களில் கனலெரியப் பார்த்தார். ‘எம்மைக் கொக்கென்று நினைத்தீரோ கொங்கணவா?’ என்றாள் அப்பெண் நகைத்தவாறே.
கௌசிகன் திடுக்கிட்டுப் போனார். காட்டில் நாம் கொக்கை எரித்ததை இப்பெண் எவ்வாறு கண்டாள்? என யோசித்தார் முனிவர். முனிவரே! தன் கணவர், மாமனார், மாமியாருக்குப் பணிவிடைகளைச் செய்து வாழும் பெண் தவயோகியைவிடச் சிறந்தவள்! அவளுக்கு இறைவனின் அருள் பூரணமாகக் கிட்டுகிறது! அவள் தவம் செய்து தான் தெய்வசக்தியை அடைய வேண்டும் என்றில்லை! நீங்கள் பெரிய தவயோகியாக இருக்கலாம்; ஆனால் ஞானம் பூரணமாகக் கிடைக்க மிதிலையில் வாழும் தர்மவியாதர் என்பவரைச் சந்தியுங்கள்! என்றாள் அப்பெண்.

அதற்குக் காரணமான கௌசிகன் (அந்தண தவ யோகி) ஒரு எளிய கிராமத்துப் பெண்ணிடம் ‘தனது கடமைச் சரிவரச் செய்பவனுக்குத் தெய்வமே உறுதுணையாக நிற்கும்’ என்ற பாடத்தைக் கற்றுக்கொண்டார். மிதிலை நகரில் வசிக்கும் தர்மவியாதர் என்ற தர்மவானிடம் சென்று, வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான தர்மத்தைப் பற்றி அறிந்து வருமாறு அப்பெண் கூறினாள். கௌசிகனும் மிதிலைக்குச் சென்று தர்மவியாதரைப் பற்றி விசாரித்தறிந்தார். ஆனால் அங்குச் சென்ற கௌசிகனுக்கு வியப்பு காத்திருந்தது.

மிக உயர்வாக நினைத்து வந்த கௌசிகனுக்குத் தர்மவியாதர் என்பவர் வேடர்குலத்தில் வந்தவர் என்பதும், தான் வேட்டையாடிய மாமிசத்தை விற்றுப் பிழைப்பவர்! என்பதும் சற்றும் எதிர்பாராததாக இருந்தது. மான், எருமை போன்ற மிருகங்களின் மாமிசத்தை விற்றுக் கொண்டிருந்த தர்மவியாதரிடம் சென்று, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் கௌசிகன்.

மாமிசத்தை வாங்க மக்கள் பலர் காத்திருந்ததால், கௌசிகரைக் காத்திருக்கக் கூறிவிட்டு, தன் வியாபாரத்தைக் கவனித்தார் தர்மவியாதர். கௌசிகன் அந்த மாமிசக் கடையில் நிற்பதற்கே கூச்சப்பட்டு, தனியே ஓரிடத்தில் அமர்ந்தார். தனது பணியை முடித்துவிட்டு வந்த தர்மவியாதர், அந்தணரே, எனது இல்லத்திற்குச் சென்று நாம் பேசலாம்! என அவரை அழைத்துச் சென்றார்.

அந்தணரை முறைப்படி உபசரித்தார் தர்மவியாதர். அவரது வருகையின் காரணத்தைப் புரிந்துக்கொண்ட வியாதர், தான் ஒரு வேடன் என்பதையும், பரம்பரையாக இத்தொழிலைச் செய்து வருவதாகவும், பெற்றோருக்கு பணிவிடைகளை முறைப்படிச் செய்து, அவர்களை நன்கு பராமரித்து வருவதாகவும் கூறினார். தாங்கள் என்னக் கூறினாலும் என் மனம் தங்களுக்காக வருந்துகிறது, உமது தொழில் கோரமானது, விலங்குகளைக் கொன்று விற்பது தர்மமாகுமா? என்றார் கௌசிகன்.

விலங்குகளை வேட்டையாடுவதும், அவற்றை விற்றுப் பிழைப்பதும் எனது குலத்தொழில்; அதில் எந்த தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்றார் வியாதர். என் பெற்றோரை நன்கு பாதுகாக்கிறேன், எப்பொழுதும் உண்மையையே பேசி வருகிறேன், யாரைப் பார்த்தும் பொறாமைக் கொண்டதில்லை, தானதர்மங்களைச் செய்கிறேன், விருந்தினர், வேலைக்காரர்களை நன்கு பாதுகாக்கிறேன், எச்செயலைச் செய்தாலும் தெய்வத்தை நினைத்தே செய்கிறேன்! என்றார் வியாதர். என் தொழில் எனக்கு தெய்வம் போன்றது; அதை நேர்மையாக, முறையாகச் செய்வதால், எனக்கு அது மனநிறைவைத் தருகிறது! என்றார் தர்மவியாதர்.

தவசீலரே! உலகில் இம்சை இல்லாத தொழிலே கிடையாது. உலகம் உய்யவதற்காகச் செய்யும் புனிதமான பயிர் தொழிலிலும் உயிர்வதை இருக்கிறது; நிலத்தை உழும்போது அங்கே எண்ணற்ற சின்னஞ்சிறு உயிரினங்கள் மடிகின்றன; காய், கனிகள், கொட்டைகள், தானியங்கள் அனைத்துமே உயிருள்ளவையே. ஏனெனில் விதையைத் தூவினால், அது முளைக்கிறது ; அப்படியானால் அதில் உயிர் இருக்கிறது, தாவரங்களுக்கும் உயிருண்டு, கீரைகளை வேரோடு பிடுங்கி உண்கிறோமே, அதற்கும் உயிர் இருக்கிறது என்றார் வியாதர்.

தாவரங்களை உண்டு வாழும் விலங்குகளைச் சிங்கம், புலி போன்ற விலங்குகள் உண்கின்றன; எல்லா ஜீவராசிகளும் பிற உயிரினங்களை உண்டே வாழ்கின்றன.

எனவே இதுதான் சரியானது; இதுவே முறையானது என வகுப்பது சரியல்ல! என்றார் வியாதர். அவரவர் தர்மப்படி கடமைகளை நேர்மையோடு, சரிவர செய்து வந்தால் தெய்வ சக்தி நமக்குள் தோன்றும்! என்றார் வியாதர்.

அந்தணரே! பெற்றோரை நன்கு பாதுகாத்து வாருங்கள்! அதுவே எல்லாவற்றிலும் மேலான தவம் ; நானும் முற்பிறவியில் அந்தணனாக இருந்து ஒரு சாபத்தினால் காட்டு வேடனானேன்! என்றார் தர்மவியாதர்.

அதென்ன கதை வியாதரே! என்றார் கௌசிகன். தனது முற்பிறவியைப் பற்றியும், ஒரு முனிவர் அளித்தச் சாபத்தைக் குறித்தும் கூறத் தொடங்கினார் தர்மவியாதர்.

( கொக்கை எரித்தக் கதையை கொங்கண சித்தர் செய்ததாகவும்,
சொல்லப்படுகிறது. அவர் யாசகம் பெற்ற பதிவிரதைத் திருவள்ளுவரின் மனைவி வாசுகி! எனவும் கூறப்படுகிறது. கொங்கணவரே, தர்மவியாதரைச் சந்தித்து தர்மங்களை அறிந்ததாகவும், போகரைக் குருவாக ஏற்று வேங்கட மலையில் இருந்து தவம் செய்தார் எனவும் கூறப்படுகிறது.)

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *