- slide, தற்போதைய செய்திகள், புராண பெரியோர்கள்

ஞானக்கண் பெற்ற கவிஞர் அந்தகக்கவி வீரராகவர்!!

Spread the love

பல்லவர்களின் நாடான தொண்டை நாட்டில் தோன்றியவர் வீரராகவர் என்ற புலவர். இவர் கண்பார்வையற்றவர்! ஆனால் சிறந்த இறை ஞானம் பெற்றவர்

கண்பார்வையற்றவர், என்பதால் இவரை “அந்தகக் கவி” என்பர். (அந்தகன்= பார்வையற்றவர்). இவர் பல கோயில்களின் தலபுராணங்களையும் பாடியவர்.

இவரது ஞானத்தையும், கவிப் புலமையையும் சோதிக்க ஒரு மன்னன் விரும்பினான். ஏனென்றால் வீரராகவர் கண்பார்வையற்றவர் என்றாலும், ஞானக்கண் பெற்றவர்! எனப் புகழ் பெற்றிருந்தார்.

எனவே அம்மன்னன், அவருக்கு முன்பாக ஒரு வில்லில் அம்பைத் தொடுத்த நிலையில் நின்றவாறே, நான் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறேன்? எனக் கேட்டாரம். அதற்கு அவர் பாடிய பாடலிது..

“வாழும் இலங்கைக்கோ மானில்லை மானில்லை
ஏழு மராமரமோ ஈங்கில்லை ஆழி
அலையடைந்த செங்கை அபிராமா! இன்று சிலையெடுத்த வாறெமெக்குச் செப்பு”.

அதாவது வில்லில் அம்பைத் தொடுத்த நிலையில் மன்னன் நின்றதால், அவரை இராமராகவே கண்டு பாடுகிறார் வீரராகவர்.

என்னே! அவரது இறை ஞானம்? ஏனென்றால் நாடாளும் மன்னர்களை திருமாலாகவே காண்பது மரபு. “திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேன்” என்பது பழமொழி. நாட்டைக் காக்குப் மன்னனும் காக்கும். கடவுளின் அம்சமே! என்பர்.

விஷ்ணு என்றாலே “எங்கும் வியாபித்திருப்பவர்! என்பதே பொருள். அதனால் வில்லேந்திய மன்னனை, இராமராகக் கண்டு பாடுகிறார்! புலவர்.

பாடலின் பொருள்

இலங்கையின் கோமான் ஆகிய இராவணன், உன் முன்னே இல்லை. மாரீசன் மாறி வந்தானே, அந்த மானும் இங்கில்லை. சுக்ரீவனின் சந்தேகத்தைத் தீர்க்க ஏழு மராமரங்களை ஓரம்பால் துளைத்தாயே? அந்த மராமரங்களும் இங்கில்லை. உன் கையோ, ஆழி என்ற கடலின் அலைகளையே அடைத்து, சேதுபந்தனம் கண்ட செங்கை. இப்பொழுது அக்கரத்தில் ஏன் வில்லம்பை ஏந்தி நிற்கிறாய்? என்கிறார்! கண்பார்வையற்ற ஞானக்கவி வீரராகவர்.

இவரது இன்னொரு பாடல்

“சோனையும் காத்துநல் லானையும் காத்து திரௌபதிதன்
தானையும் காத்தடைந் தானையும் காத்து தடத்தகலி மானையும் காத்தனு மானையும் காத்து மருவிலுறு ஆனையும் காத்தவனே! எனைக்காப் பது அரிதல்லவே.

இதில் ஒவ்வொரு வரியிலும் ஒரு கதையுள்ளது.

சோனை என்றால் இடைவிடாத மழை எனப் பொருள்.

சோனையும் காத்து கிருஷ்ணாவதாரத்தில், இந்திரன் கடும் மழையைப் பொழிந்து ஆயர்பாடியை அழிக்க முயன்றபோது, கோவர்த்தன மலையையே தூக்கி, மழையைத் தடுத்து ஆயர்களைக் காத்தார் கண்ணன்.

நல்லானை காத்து நல்ல ஆவினங்களைக் காத்து என்று பொருள். கிருஷ்ணர் பசுக்களை மேய்த்து, அவற்றை பாதுகாத்தார்.

திரௌபதி தன் தானையும் காத்து தானை = ஆடை.
கர்ணனின் தூண்டுதலினால் துரியோதனன், திரௌபதியின் ஆடைகளை உருவும்படி துச்சாதனனுக்குக் கட்டளையிட்டான். சபை நடுவே திரௌபதி அவமானப்பட்டபொழுது, எண்ணற்ற ஆடைகளை அவளுக்கு வழங்கிக் காத்தார்! கண்ணன்.

அடைந்தானையும் காத்து.. இராமாவதாரத்தின் பொழுது, விபீஷணன், அவரைச் சரணடைந்தான். அப்பொழுது அனைவரும் இராட்சதனின் தம்பியை நம்பக்கூடாது! என்றனர். ஆனால் என்னைச் சரணாகதி என அடைந்தோரை எப்பாடுபட்டேனும் காப்பேன்! என இராமர், அவனைக் காத்தருளினார்.

தடத்தகலிமானையும் காத்து_ இதை தடத்து அகலி மானையும் காத்து எனப் பிரிக்க வேண்டும். தடத்து=வழி இராமர் மிதிலைக்குச் செல்லும் வழியில் கல்லாக இருந்த அகலிகையின் சாபத்தைப் போக்கி, காத்தருளினார்.

அனுமனையும் காத்து_ அனுமனுக்குச் சோதனை வரும்பொழுதெல்லாம் ராம் ராம் எனத் தாரக மந்திரத்தை உச்சரித்தே, அந்த இடையூறுகளிலிருந்து விடுபட்டார். இப்படி அனுமனையும் காத்தார் இராமர்.

மயிலுறு ஆனையும் காத்தவனே_ குளத்திலிருந்த முதலையிடம் மாட்டிக் கொண்ட யானை ஆதிமூலமே! என அழைத்ததும் ஓடோடி வந்து காத்தருளினார்! திருமால்.

இப்படியெல்லாம் அனைவரையும் காத்தத் திருமாலே! ‘என்னைக் காப்பது அரிதல்லவே!’ என்கிறார் அந்தகக் கவி வீரராகவர்.

பார்வையற்றவராக இருந்தாலும், பக்தியினால் ஞானக்கண் பெற்ற புலவர் வீரராகவரின் கவிநயம் அனைவரையும் கட்டிப்போடும் வல்லமை மிக்கது.

ஶ்ரீராமஜெயம்

கீதப்பிரியை-உமா ராதாகிருஷ்ணன்.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *