- slide, தற்போதைய செய்திகள், புண்ணிய தலங்கள்

சங்கடம் போக்கும் சமயபுரம் மாரியம்மன் வரலாறு!!!

வைஷ்ணவி என்ற மாரியம்மன் சிலை முற்காலத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்ததாம்.

அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால், அங்கிருந்த ஜீயர் சுவாமிகள், அச்சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார். அவருடைய ஆணைப்படி வைணவியின் சிலையை அப்புறப்படுத்த வந்தவர்கள் வடக்கு நோக்கிச் சென்று சற்று தூரத்தில் தற்போதுள்ள இனாம் “சமயபுரம்” என்னுமிடத்தில் இளைப்பாறினார்கள்.

பிறகு அதனை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து தற்போதுள்ள மாரியம்மன் கோயில் அமைந்துள்ள கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றனர்.

அப்பொழுது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அச்சிலையைப் பார்த்து அதிசயப்பட்டு அக்கம்பக்கத்தில் இருந்த கிராம மக்களைக் கூட்டிவந்து அதற்கு ”கண்ணனூர் மாரியம்மன்” என்று பெயரிட்டு வழிபடத்தொடங்கினர்.

அக்காலகட்டத்தில் விஜயநகர மன்னர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து, கண்ணனூரில் முகாமிட்டார்கள். அப்போது மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோயில் கட்டி வழிபடுவதாக சபதம் செய்தார்கள். அதன்படியே வெற்றி பெறவே, கோயிலைக் கட்டினார்கள். விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் கி.பி. 1706-ல் அம்மனுக்கு தனியாக கோயில் அமைத்தார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோயில் இன்று, ”சமயபுரம் மாரியம்மன்” கோயிலாக மாறி புகழ்பெற்று விளங்குகிறது.

தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் முதன்மையானது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும். அன்று முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்து வருகிறது. தினமும் இரவில் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சமயபுரத்தாளை வழிபட தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலத்தவரும், பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர்.

ஆடி வெள்ளி, பூச்சொரிதல் விழா போன்ற விழாக்காலங்களிலும் கூட்டம் அதிகமாகிறது. ஆடி மாதத்தில் எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும். குறிப்பாக ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி இலட்சக்கணக்கான மக்கள் அம்மனைத் தரிசிக்கக் கூடுவார்கள்.

அன்னை சமயபுரத்தாளே போற்றி.
அன்னை பத்ரகாளியே போற்றி

-கீதப்பிரியை. உமா. ராதாகிருஷ்ணன்.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *