- இராமாயணம், தற்போதைய செய்திகள்

கவி சக்கரவர்த்தியின் இராமாயணம்! தொடக்கம்-1

Spread the love

கம்பராமாயணம்

பாலகாண்டம்

இராமகாதையின் மகிமை:
(இராம காதை என்பதே இராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர்)

1.காப்பும் கம்பன் புகழும்.

கம்பராமாயணத்தை ஆரம்பிக்கும் முன்னர், இருபது காப்பு செய்யுள்கள் அமைந்துள்ளன. சிறந்த சில காப்புச் செய்யுள்களைப் பார்ப்போம்.

1.”தருகை நீண்ட தயரதன்தான் தரும் இரு கை வேழத்து இராவன்தன் கதை திரு கை வேலைத் தரைமிசைச் செப்பிட குருகை நாதன் குரை கழல் காப்பதே”.

பொருள்:
கொடைக் குணத்தில் சிறந்த தசரத சக்ரவர்த்தி பெற்ற, இரண்டு கரங்களையுடைய யானையைப் போன்றவனான இராமரின் வரலாற்றை, கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தில் சொல்வதற்குக் காப்பாக இருப்பது, திருக்குருகூரில் தோன்றிய தலைவராகிய நம்மாழ்வாருடைய, ஒலிக்கும் வீரக்கழல் அணிந்த திருவடிகளேயாகும்.

2.அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் அவன் எம்மை அளித்துக் காப்பான்”.

பொருள்:
பஞ்சபூதங்களையே இங்கே அஞ்சிலே (ஐந்திலே) என்கிறார் புலவர். பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுதேவனால் பெற்றெடுக்கப்பட்டு, ஐம்பூதங்களில் ஒன்றான நீரைத்(கடலை) தாண்டி, இராமனுக்காகச் சென்று, ஐம்பூதங்களில் ஒன்றான பூமாதேவி பெற்றெடுத்த சீதாதேவியைக் கண்டு, பின்பு பகைவர் ஊரான இலங்கையில் ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பை வைத்தவனான அந்த அனுமான்,
எம் செயல் இனிதே முடியக் கருணையோடு காப்பானாக.

13.”நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றி தீருமே
இம்மையே ராமா என்ற இரண்டு எழுத்தினால்”.

“ராமா” என்ற இரண்டு எழுத்துக்களைச் சொல்வதால், அந்த இராமன் இப்பிறவியிலேயே எப்பொழுதும் எல்லா நன்மைகளையும், செல்வங்களையும் கொடுத்து அருளுவான்; தீச்செயலும், தீவினையும் அழிந்து மறையும்; பிறப்பு, இறப்பு இனி இல்லாமல் தீர்ந்து விடும்.

19.”ஆதி அரி ஓம் நம நாராயணர் திருக் கதை அறிந்து அனுதினம் பரவுவோர்
நீதி அனுபோக நெறிநின்று நெடுநாள் அதின்
இறந்து சகதண்டம் முழுதுக்கு
அதிபர்களாய் அரசு செய்து உளம் நினைத்தது கிடைத்து அருள் பொறுத்து முடிவில் சோதி வடிவாய் அழிவு இல் முக்தி பெறுவார் என உரைத்த சுருதித் தொகைகளே”.

தொடங்கும் போது “ஹரி ஓம் நமஹ” என்று சொல்லி வணங்கி, நாராயணனின் அவதாரமான இராமரது புனிதமான கதையை அதன் பொருள் அறிந்து துதிப்பவர்கள், இவ்வுலகத்தில் நெடுங்காலம் சுகத்தை நிலையாக அனுபவித்து, அதனைக் கடந்து இப்பிரபஞ்சம் முழுவதுக்கும் தலைவராகி ஆட்சி செய்து, மனத்தில் நினைத்தவை எல்லாம் கிடைக்கப் பெற்று, அதனால் இறுதியில், பேரொளி வடிவாகி என்றும் அழியாமல் நிற்கும் மோட்சம் பெறுவார்கள்! என்று வேத நூல்களின் தொகுதிகள் கூறியுள்ளன.

20.”இனைய நல்காதை முற்றும் எழுதினோர் வியந்தோர் கற்றோர்
அனையது தன்னைச் செல்வோர்க்கு அரும் பொருள் கொடுத்துக் கேட்டோர்
கனை கடல் புடவிமீது காவலர்க்கு அரசாய் வாழ்ந்து
வினையம் அது அறுத்து மேலாம் விண்ணவன் பதத்தில் சேர்வார்”.

இத்தகைய சிறப்புடைய இராமகாதை முழுவதையும் எழுதியவர்களும், பாராட்டியவர்களும், படித்தவர்களும், அக்காதையைச் சொன்னவர்களும் அருமையான பொருளைக் கொடுத்துக் கேட்டவர்களும் ஒசையெழுப்பும் கடலால் சூழப்பட்ட இந்த உலகில், அரசர்களுக்கெல்லாம் அரசராக வாழ்ந்து, தீவினைகளை ஒழித்து மேன்மை மிக்கதான பரமபதத்தில் சேர்வார்கள்.

இவ்வாறு இருபது பாடல்களில் காப்பும் கம்பரின் புகழும், இராமாயணத்தைப் படிப்பதன் நன்மைகளும் சொல்லப்பட்டுள்ளன. ஆனால் இந்த இருபது பாடல்களையும் கம்பர் பாடவில்லை! கம்பராமாயண பக்தர்கள் பாடியவை என்கின்றனர். அதில் 12 வது பாடல் கம்பர் இராமாயணத்தை அரங்கேற்றிய விவரத்தைக் கூறுகிறது; அதன் பொருள்.

சாலிவாகன சகாப்தம் எண்ணூற்று ஏழாம் ஆண்டிற்கு மேல், சடையப்ப வள்ளல் வாழ்ந்த திருவெண்ணெய் நல்லூரிலே கம்பர், தான் இயற்றிய இராமரது வரலாற்றை, பங்குனி பாதத்தில், உத்திர நட்சத்திரத்தில், பூமாலை அணிந்த திருவரங்கனுக்கு முன்னே புலவர்கள் கூடிய அவையிலே அனைவரும் ஏற்குமாறு அரங்கேற்றினார்! என விவரம் கூறுகிறது இப்பாடல்.

கம்பர், தான் இயற்றிய இராமாயணத்திற்கு “இராமகாதை” எனப் பெயரிட்டு, அதை ஶ்ரீரங்கத்தில் நரசிம்மர் (மேட்டழகிய சிங்கர்) சந்நிதியின் முன்னர் அரங்கேற்றினார், அதில் அவர் “இரணியன் வதைப் படலம் பாடி வருகையில் நரசிங்க மூரத்தியே தன் தலையை அசைத்து, சிங்கக் கர்ஜனையைச் செய்து, “பிள்ளாய்! நம்மாழ்வானைப் பாடினாயா?” எனக் கேட்டாராம்”. அதனால் கம்பர் இராமாயணத்தைப் பாடி முடித்தப் பின்னர், “சடகோபர் அந்தாதி” என நம்மாழ்வாரைப் பற்றியும் ஒரு நூலை இயற்றினார் (சடகோபர்=நம்மாழ்வார்).

கம்பர் இராமாயணத்தை எழுதி வருகையில் திருவொற்றியூர் “வடிவுடையம்மன்” கையில் விளக்கேந்தி நிற்பாராம். இவ்வாறு இறையருள் மிக்கத் தெய்வக்கவி கம்பர் இயற்றிய இராமகாதை அடுத்த அத்தியாத்திலிருந்து தொடங்குகிறது..

ஶ்ரீராமஜெயம்

_கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *