- தற்போதைய செய்திகள், மஹாபாரதம்

காலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்! தொடர்- 5

Spread the love

மகாபாரதம்-5

5.காங்கேயன் பீஷ்மரானார்

தனது மகனை ஒப்படைத்துவிட்டு கங்காதேவி சென்றபின்னர், #தேவவிரதன் என்ற இயற்பெயரையும், கங்கையின் மகன் என்பதால் காங்கேயன் எனவும் பெயரையும் உடைய தன் மகனோடு சந்தனு சக்ரவர்த்தி நான்கு ஆண்டுகள் மகிழ்வோடு வாழ்ந்து வந்தார்.வாலிப வயதை அடைந்த தேவவிரனுக்கு “இளவரசு” பட்டத்தையும் சூட்டினார் சந்தனு சக்ரவர்த்தி. ஆனால் விதி வேறு கதையை எழுதியது. அது உணர்வுபூர்வமான தியாகத் திருவரலாறு. இதுவரை உலகில் பிறந்த எந்த மகனும் ஒரு தந்தைக்காகச் செய்யாத தியாகம் அது. எந்த நாட்டு இலக்கியங்களிலும், வரலாறுகளிலும் கூட, நாம் காண முடியாதச் செயற்கரிய தியாகம் அது.

தனது வாழ்வைப் புரட்டிப் போடும் ஒரு நிகழ்வு அன்று நடக்கப் போவதை அறியாத சந்தனு மன்னர், அன்று அதிகாலைப் பொழுதில் கங்கை நதியோரம் உலவினார். அப்பொழுது கங்கை நதியில் ஒரு தேவதையைப் போன்ற பேரழகுப் பெண்ணொருத்தி ஓடத்தை ஓட்டிக் கொண்டிருந்தாள். அவளிடமிருந்து இனிய நறுமணம் வீசியது; அவளது பேரெழிலில் மயங்கி நின்ற சந்தனு மன்னரின் இதயத்தில் மீண்டும் காதல் பூத்தது.

ஓடத்தை விட்டிறங்கிக் கரையோரம் நடந்து வந்த அப்பெண்ணிடம், பெண்ணே! நீ யார்? நான், உன்னை மணம் புரிய விரும்புகிறேன்! என்றார் சந்தனு மன்னர். மன்னா! நான் செம்பவப் பெண்; என் பெயர் சத்தியவதி; என் தந்தை மீனவர் தலைவர்; என்னை மணக்க விரும்பினால், என் தந்தையின் அனுமதியைத் தாங்கள் பெற வேண்டும்! என்றாள் சத்தியவதி.

சந்தனு மன்னர், அந்த மீனவர் தலைவனைச் சந்தித்து, சத்தியவதியை மணக்க அனுமதியைக் கேட்டார். ( சத்தியவதிக்குப் பரிமளகந்தி என்ற சிறப்புப் பெயரும் இருந்தது). மன்னா! இவள் எனது மகளாக வளர்ந்தாலும் சேதி நாட்டரசன் “உபரிசரஸ்” என்பவனது மகள். எனவே நீ இவளை மணக்க விரும்பினால் ஒரு நிபந்தனையுள்ளது. இவளது வயிற்றில் பிறக்கும் மகனுக்கே நீ இளவரசு பட்டம் கட்டவேண்டும்; அவனுக்கே நீ அரசுரிமையைத் தர வேண்டும்! என்றார் மீனவர் தலைவன் தாஸராஜன்.

அதைக் கேட்ட மன்னர் திகைத்து நின்றார். இந்நாட்டின் எதிர்கால மன்னனென தேவவிரதனுக்கு இளவரசு பட்டம் சூட்டப்பட்டுள்ளது. அவனே எனக்குப் பிறகு இந்நாட்டின் மன்னனாக முழு தகுதியும் உடையவன்; எனவே இது நடவாது! எனக் கூறிவிட்டு வருத்தத்துடன் சென்றார் சந்தனு சக்ரவர்த்தி. ஆனால் அவரால் சத்தியவதியை மறக்க இயலவில்லை! எனவே எந்நேரமும் சோகமாகவே இருந்தார் சந்தனு.

தந்தையை உயிரென காத்து வந்த அருந்தவப் புதல்வனான காங்கேயனுக்கு, தந்தையின் முகம் வாடியிருப்பதைக் காண சகிக்கவில்லை. எனவே தந்தையின் சோகத்திற்கு காரணமென்ன? எனத் தந்தையின் தேரோட்டியைச் சந்தித்துக் கேட்டார் தேவவிரதன். சக்ரவர்த்தி, மீனவர் தலைவரைச் சந்தித்து, அவரது மகளை மணம்புரியக் கேட்டதையும், அவரது நியாயமற்ற நிபந்தனையை ஏற்க இயலாமல் மன்னர் திரும்பிவிட்டார்! என்றும் கூறினான் தேரோட்டி.

இவ்வளவு தானா? இதற்காகவா தந்தை மனவருத்தத்துடன் உள்ளார்? என நினைத்தத் தேவவிரதன், உடனே தேரிலேறி மீனவர் தலைவனைச் சந்திக்கச் சென்றார். தன்னைத் தேடி வந்த இளவரசனை வரவேற்ற தாஸராஜன், தனது நிபந்தனையை அப்படியே அவரிடமும் கூறினார். தாங்கள் சற்றும் தயங்க வண்டாம். எனக்கு நாடாளும் உரிமை வேண்டாம்; நான் அதை இக்கணமே துறந்துவிட்டேன். தங்கள் மகளை என்தந்தைக்கு மணமுடித்து வையுங்கள்! என்றார் தேவவிரதன்.

இளவரசே! தாங்கள் அரசுரிமையைத் துறந்தாலும், ஆனால் உங்கள் புத்திரர்களுக்கே அரசுரிமை வரும்; பிறகு என் மகளின் புத்திரர்கள் எப்படி நாடாள முடியும்? எனவே என் மகளின் வாரிசுக்கு நாடாளும் உரிமையைத் தருபவருக்கே சத்தியவதியை மணமுடித்துத் தருவேன்! என்றான் பேராசைக்காரனான மீனவர் தலைவர்.

அவ்வளவுதானே! இதோ நான் சபதமேற்கிறேன்! இப்பொழுது நான் செய்யப் போகும் சபதத்தை இதுவரை யாரும் செய்ததில்லை! பஞ்சபூதங்கள் சாட்சியாக, தேவர்கள், ரிஷிகள், சாட்சியாக நான் இக்கணமே அரசுரிமையை துறக்கிறேன்; நான் உயிரோடு இருக்கும்வரைத் திருமணமே செய்யமாட்டேன்! என் சந்ததியை உருவாக்கவே மாட்டேன்! இந்நாட்டை ஆளும் மன்னனுக்கு எப்பொழுதும் பக்கபலமாக இருப்பேன்! என மும்மூர்த்திகளின் சாட்சியாகவும் சபதமேற்கிறேன்! என யாரும் நினைத்து பார்க்கவும் முடியாதக் கடும் சபதத்தை செய்தார் காங்கேயன்.

அவரது சபதத்தைக் கேட்ட மீனவ ராஜன் மெய்சிலிர்க்கத் திகைத்து நின்றான். விண்ணிலிருந்து தேவர்களெல்லாம் பீஷ்ம! பீஷ்ம! எனக்கூறி பூமாரி பொழிந்தனர். பீஷ்மர் என்றால் “செயற்கரிய செயலைச் செய்தவர்” என்பது பொருளாகும். அன்றிலிருந்து காங்கேயனான தேவவிரதன், பீஷ்மர் என அழைக்கப்பட்டார். தங்களின் தந்தைக்கு என் மகளை மணமுடித்துத் தருகிறேன்! என்றான் தாஸராஜன். மறுகணமே தாயே! சத்தியவதி! தேரிலேறுங்கள்! இப்பொழுதே தங்களை அரண்மனைக்கு என் அன்னையாக அழைத்துச் செல்கிறேன்! என்றார் பீஷ்மர்.

பரிமளகந்தியான சத்தியவதி மகிழ்வோடு தேரிலேறினாள்! அவளை அழைத்துச் சென்று தந்தையின் முன் நிறுத்தினார் பீஷ்மர். இதற்கு முன் இளவரசர் அரியதொரு சபதத்தைச் செய்துவிட்டார்! என்ற தகவல் மன்னரின் செவிகளுக்கு எட்டிவிட்டது. மகனே! என்னச் செய்துவிட்டார்? நாடாள வேண்டிய நீ, எனக்காக முடியுரிமையையும் துறந்து, உன் எதிர்கால வாழ்வையும் நாசமாக்கி விட்டாயே மகனே? என வருந்தினார் சந்தனு சக்ரவர்த்தி. தந்தையே! எனக்கொரு தாயை அழைத்து வந்துள்ளேன்! அதிலென்ன தவறு தந்தையே! என்றார் பீஷ்மர்.

தன் மகனின் செயற்கரியச் செயலை நினைத்துப் பெருமிதப்பட்டாலும், உள்ளம் வேதனையடையவே செய்தது சந்தனுவுக்கு. ஆனால் உலகில் இதுவரையும், இதற்குப் பின்னரும் இப்படியொரு மகன் யாருக்கும் பிறக்கவே முடியாது! எனப் பூரிப்படைந்தார் சந்தனு சக்ரவர்த்தி.

சந்தனு, பதிலுக்குப் பீஷ்மருக்கு ஒரு வரமளித்தார். மகனே! நீ பூமியில். வாழ விரும்பும் காலம் வரையில் நீ வாழலாம்! நீயாக விரும்பி யமதர்மனை அழைத்தால் மட்டுமே, அவர் உன்னை நெருங்குவார்! உனது அனுமதியைப் பெற்றே யமனும் உன்னைத் தொடுவான் மகனே! என அருமை மகனுக்கு வரமளித்தார் சந்தனு.

புனித நதி கங்கையின் மகனல்லவா! அவரது எண்ணங்களும் சுயநலமற்ற தியாகத்தை அடிப்டையாகக் கொண்டிருந்ததில் எந்த வியப்புமில்லை.

ஆனால் பேராசைக்காரர்களின் சுயநல அரசியல் என்றைக்கும் வேதனையையே தரும்! என்பதை அப்பொழுது மீனவர் தலைவனும் உணரவில்லை; சத்தியவதியும் உணரவில்லை.

கீதப்பிரியை . உமா ராதாகிருஷ்ணன்.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *