- தற்போதைய செய்திகள், மஹாபாரதம்

காலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்! தொடர்- 2

Spread the love

யுதிஷ்டிரருக்கு இளவரசு பட்டம்

குரு வம்சத்தின் மூத்த வாரிசான யுதிஷ்டிரருக்கு இளவரசர் பட்டம் சூட்டப்பட வேண்டுமென மன்னன் திருதராஷ்டிரனின் விருப்பத்தையும் மீறி அரசவையில் பிற பெரியோர்கள் ஒட்டுமொத்தமாக முடிவெடுத்தனர்.

துரியோதனனின் தந்தையே வயதில் மூத்தவர் என்றாலும் அவர் கண்பார்வையற்றவர் என்பதால் நாடாள தகுதியற்றவர் என முன்பே ஒதுக்கப்பட்டவர். ஊனமுற்றவர்களுக்கு அரசாட்சிக் கிடையாது! என்ற நீதிப்படி, அவரை விலக்கிவிட்டு, பாண்டுவை மன்னனாக்கினர்! பீஷ்மரும், குலகுரு கிருபரும், மற்றும் ஏனைய பெரியோர்களும். மன்னரான பாண்டு சிறிது காலம் நல்லாட்சி வழங்கினார். அவர் யதுகுல மன்னரான குந்திபோஜனின் மகளான (கிருஷ்ணரின் தந்தை வசுதேவரின் தமக்கையே குந்தி) குந்தியை மணந்தார். பின்னர் இரண்டாவதாக மத்திர தேசத்து இளவரசி மாத்ரியை (சல்லியனின் சகோதரி) மணந்தார் பாண்டு.

பின்னர் வேட்டைக்கு வனத்திற்குச் சென்ற பாண்டு இணைந்திருந்த மான்களில் ஒன்றின் மீது தெரியாமல் அம்பெய்துவிட, அந்த ஆண்மானானது உடனே ஒரு முனிவராக மாறியது. மூடனே! நான் என் மனைவியோடு மானின் வடிவில் மகிழ்ந்திருந்தேன். உனது அம்பால் நான் சாகப் போகிறேன்! எனவே நீயும் உன் மனைவியைச் சேர்ந்தால் மறுகணமே உயிரை விடுவாய்! எனப் பாண்டுவிற்குச் சாபமளித்துவிட்டு மரணமடைந்தார் அமுதந்தி முனிவர்.

இதனால் மனமுடைந்த பாண்டு நாட்டிற்குத் திரும்பியதும், தனது மகுடத்தைப் பார்வையற்ற அண்ணன் திருதராஷ்டிரனுக்குச் சூட்டினார். நான் மன ஆறுதலுக்காகச் சிறிது காலம் வனவாசம் செய்யப்போகிறேன்! நான் திரும்பி வரும்வரை நீங்களே நாட்டை ஆண்டுவாருங்கள்! என்றார் பாண்டு. எனவே அரசாள தகுதியில்லை! என ஒதுக்கப்பட்ட திருதராஷ்டிரனை இடைக்கால மன்னராக்கியவர் பாண்டு மகாராஜாவே.

எனவே மூத்தவராகப் பிறந்திருந்தாலும் திருதராஷ்டிரனுக்கு ஆட்சியில் உரிமையில்லை. அவர் ஒரு காபந்து அரசராகவே இருந்தார்; முறைப்படி பட்டாபிஷேகம் செய்யப்பட்டவரல்லர். எனவே தந்தைக்கே அரசாட்சியில் உரிமை இல்லாதபோது, மகன் உரிமை கோரமுடியாது! என்பது தர்ம நியாயத்தின் அடிப்படை.

வனவாசத்திற்குச் சென்ற பாண்டு, தனக்கு வாரிசே வராதே? எனக் குந்தியிடம் கலங்கக் குந்திதேவி, தான் இளவயதில் துர்வாச மாமுனிவருக்குப் பணிவிடை செய்ததால், அவர் எனக்கு அரியதொரு வரத்தை அளித்தார்! என்றாள். முக்காலமும் உணர்ந்த மாமுனியல்லவா? இவளது வாழ்வில் பின்னாளில் வரப்போகும் சோகத்தையறிந்து அப்பொழுதே வரமளித்தார்! போலும். அதாவது “நான் எந்த தேவனை நினைத்து மந்திரத்தைச் சொல்கிறேனோ, அவரது அருளால், அவரது அம்சமாக ஒரு மகன் எனக்குப் பிறப்பான்;” இம்மந்திரத்தை நான்கு முறைகள் பயன்படுத்தலாம்! எனத் துர்வாசர் வரமளித்தார்! என்றாள் குந்திதேவி.(ஐந்து வரத்தில் ஒன்றை திருமணத்திற்கு முன்பே பயன்படுத்தி விட்டாள்) சோகத்திலிருந்தப் பாண்டு, மகிழ்வுடன் அவ்வாறே கேள்! எனக்கூற யமதர்மராஜனை வேண்டி மந்திரம் கூறி, பிறந்த மகனே யுதிஷ்டிரர். இவர் தருமமே வடிவானவர் என்பதால் தருமர் எனப்பட்டார். மறு ஆண்டு வாயுவபகவானை நோக்கி, மந்திரத்தைக் கூறி பீமனைப் பெற்றாள் குந்தி. இனி தேவேந்திரனின் மகன் வேண்டுமென பாண்டு கூற, தேவேந்திரனை நோக்கி மந்திரத்தைக் கூறி அர்ஜுனனைப் பெற்றாள் குந்தி இன்னொரு மகன் வேண்டுமென பாண்டு கூற மனம் வருந்தினாள் குந்தி.

அந்நேரம் மாத்ரி, எனக்கு அம்மந்திரத்தைக் கூறுங்கள் அக்கா! எனக்கும் பிள்ளைகள் வேண்டுமென குந்தியை வேண்டினாள். எனவே ஒரே மந்திரத்தில் இரட்டைப் புத்திரர்களைப் பெறுவதற்காக அஸ்வினி தேவர்கள் என்ற இரட்டையரை வேண்டும், மந்திரத்தை மாத்ரிக்குக் கற்றுக் கொடுத்தாள் குந்திதேவி. அதன்படியே மாத்ரி வேண்ட அவளுக்கு நகுல, சகாதேவர்கள் பிறந்தனர்.

“மிக இளவயதில் துர்வாசரிடம் வரம்பெற்ற குந்தி, அவ்வரத்தைப் பரிசோதித்துப் பார்க்க நினைத்து, சூரியனை நோக்கி, மந்திரம் கூறி பிறந்தவனே கர்ணன்.” அவன் பிறக்கும் போதே காதில்(கர்ணம்= காது) குண்டலங்களோடும், உடம்பில் கவசத்தோடும் பிறந்தான். உலகத்தாரின் பழிக்கஞ்சிய குந்தி அவனை ஆற்றில்விட, அவனைத் திருதராஷ்டிரனின் தேரோட்டி எடுத்து வளர்த்தான். இவ்வாறு தான் விரும்பியபடி ஐந்து புதல்வர்களை வனத்திலேயே கிடைக்கப் பெற்ற பாண்டு, விதிவசத்தால் மாத்ரியை நெருங்க, முனிவரின் சாபத்தால் அக்கணமே உயிரை விட்டார்.

இதனால் மனம் துடித்துப் போன மாத்ரி, தன் புதல்வர்களைக் குந்தியிடமே ஒப்படைத்துவிட்டு பாண்டுவுடனே உடன்கட்டை ஏறினாள். பின்னர் தகவலறிந்தப் பீஷ்ம பிதாமகர், குந்தியையும், அவளது ஐந்து புத்திரர்களையும் அஸ்தினாபுரத்திற்கு அழைத்து வந்தார். எனவே தான் துரியோதனன், தன் மாமா சகுனியின் துர்போதனையால் இளவயதிலிருந்தே பாண்டவர்களை வெறுத்து வந்தான்.

தந்தைக்கே இல்லாத உரிமை தனக்குக் கிடையாது! என்பதையறியாதத் துரியோதனன், தனக்கே இளவரசு பட்டம் கிடைக்க வேண்டுமென தீவிரமாக விரும்பினான். இதை உணர்ந்திருந்தப் பெரியோர்கள், மூத்தவரின் மகன் என்பதால் துரியோதனனுக்கும், நியாயப்படி பாண்டுவின் மகனே நாடாள வேண்டும்! என்பதாலும், இருவருக்கும் தகுதிப் பரிட்சையை வைத்தனர்.

அதில் துரியோதனனைவிட வயதில் மூத்தவரான யுதிஷ்டிரர்அனைத்து கலைகளையும், நீதிசாஸ்திரங்களையும் கற்று தேர்ந்தவர்! யமதர்மராஜாவின் அருளால் பிறந்தவர் என்றதாலும் அவரிடம் தர்ம நியாயங்களும், பொறுமையும், நிதானமும், புத்திக்கூர்மையும் இயல்பிலேயே இருந்தன.

எனவே தருமரே பெரியோர்களின் தேர்வில் வென்றார். இயல்பிலேயே பொறாமையும், வஞ்சகமும், பதட்டமும், கொடிய சிந்தனையும் நிறைந்தவனான துரியோதனன் தோல்வியடைய, யுதிஷ்டிரரை யுவராஜாவாக்கினர் பெரியோர்கள்; வேறுவழியின்றி தொண்டையில் சிக்கிய முள்ளென தன் மகனே நாடாள வேண்டும்! என்ற பேராசையை வெளியிட தயங்கி, மனதினுள்ளேயே மறுகினான் திருதராஷ்டிரன். வனத்தில் பிறந்த பிள்ளைகள் எப்படி குரு வம்சமாக முடியும்? எனக் கொதித்தான்! துரியோதனன்.

ஆனால் அவர்களது வம்சமே ஒரு மீனவனின் பேராசையால் அவ்விதமே வந்தது. பட்டத்திற்குரிய இளவரசராகக் காங்கேயன்(பீஷ்மர்) இருக்க, என் மகளுக்குப் பிறந்தவனுக்கு அரசாட்சியைத் தருவதானால் என் மகளை உன் தந்தைக்கு மணமுடித்துத் தருவேன்! என நிபந்தனை விதித்தான் மீனவர் தலைவன், காங்கேயனிடம். அதை காங்கேயன் எவ்வாறு நிறைவேற்றினார்? என்பது உலகம் இதுவரைக் கண்டிராதத் தியாகத்தின் உச்ச வரலாறு.

__கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *