- ஆன்மீக செய்திகள், தற்போதைய செய்திகள்

குமரி மாவட்டத்தில் களை கட்டும் விநாயகர் சதுர்த்தி விழா! 1,200 போலீசார் பாதுகாப்பு!

Spread the love

குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை பூஜைக்கு வைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

நாகர்கோவில்:

இந்துக்களின் முக்கிய விழாக்களில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. இந்த விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவையொட்டி இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள், பக்தர்கள் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகளை பூஜைக்கு வைத்து சில நாட்கள் கழித்து நீர்நிலைகளில் கரைப்பது வழக்கத்தில் இருந்து வருகிறது.

இதேபோல் இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி, பா.ஜனதா, இந்து மகாசபா, ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா, விசுவ இந்து பரிஷத் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் பக்தர்கள் சார்பிலும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட உள்ளன. அதாவது அரை அடி முதல் 10 அடி வரையில் விதவிதமான சிலைகளை வைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. இதற்காக நாகர்கோவில் அருகே சூரங்குடி பகுதியிலும், இரணியல் அருகே கண்ணாட்டுவிளை பகுதியிலும் ஏராளமான விநாயகர் சிலைகள் தயாரித்து வைக்கப்பட்டுள்ளன.

அதே சமயத்தில், இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் நாகர்கோவில் வடசேரி பகுதியில் வீடு, வீடாக நூற்றுக்கணக்கான காய்கறி செடிகளின் விதைகள் பதிக்கப்பட்ட அரை அடி உயரம் உள்ள களிமண் விநாயகர் சிலைகளை வழங்க திட்டமிட்டுள்ளனர். பூஜை முடிந்த பின்னர் அந்த சிலையில் செடிகள் வளர்க்க பயன்படுத்தும் தொட்டியில் வைத்தோ, மாடித்தோட்டங்களில் வைத்தோ சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தும் வகையில் திட்டமிட்டுள்ளனர்.

பொதுவாக பூஜைக்கு வைக்கப்படக்கூடிய சிலைகளை, சிலை அமைப்பாளர்கள் விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாளில் இருந்து வைக்க தொடங்குவார்கள். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட இருக்கிறது. அதற் கான ஏற்பாடுகளில் இந்து அமைப்புகளின் நிர்வாகிகளும், பக்தர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். விநாயகர் சிலைகளை பூஜைக்கு வைப்பதில் இருந்து கரைப்பது வரை பல்வேறு கட்டுப்பாடுகளை அதிகாரிகள் விதித்துள்ளனர்.

கன்னியாகுமரி பகுதியில் 108 இடங்களில் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்படுகிறது.

கன்னியாகுமரி:

விநாயகர் சதுர்த்தி விழா 2-ந் தேதி (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி பகுதியில் பிரதிஷ்டை செய்வதற்காக அகஸ்தீஸ்வரம் இந்து முன்னணி சார்பில் 108 இடங்களுக்கு விநாயகர் சிலைகள் டெம்போவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவுக்கு 7½ அடி உயர விநாயகர் சிலை அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சிலை, விவேகானந்த கேந்திரா வளாகத்தில் அமைந்துள்ள யேகாச்சர மகா கணபதி கோவிலில் பூஜைக்காக வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் விவேகானந்த கேந்திராவின் செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்தர் ராவ், நிர்வாக அதிகாரி அனந்த ஸ்ரீபத்மநாபன், கேந்திர வளாக பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

108 இடங்களிலும் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் வழிபாடு முடிந்த பிறகு வருகிற 8-ந்தேதி மதியம் 2 மணி அளவில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் முன் கொண்டு வரப்படுகிறது. பின் னர் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கன்னியாகுமரி கடலில் கரைக்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட இந்து முன்னணி துணைதலைவர் எஸ்.பி.அசோகன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

பூஜை க்கு வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கும், விநாயகர் சதுர்த்தி தினத்தன்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறியதாவது:-

பூஜை க்கு வைக்கப்படும் விநாயகர் சிலை ஒவ்வொன்றுக்கும் சிலை அமைப்புக்குழு மூலம் தன்னார்வலர்கள் 2 பேரை பகல், இரவு நேரங்களில் பாதுகாப்புக்கு அமர்த்த வேண்டும். மேலும் போலீசார் ரோந்து மூலம் சிலைகளை கண்காணிப்பார்கள். பிரச்சினைக்குரிய இடங்களில் உள்ள சிலைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக போலீஸ் பாதுகாப்பு போடப்படும். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. அன்றைய தினம் எனது தலைமையில் அனைத்து போலீஸ் அதிகாரிகளும், அனைத்து போலீசாரும் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள். இந்த பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *