- தற்போதைய செய்திகள், புண்ணிய தலங்கள்

பாவாடை தாவணியில் முக்கடல் நாயகி குமரி பகவதி அம்மன் வரலாறு!!

Spread the love

முக்கடல் நாயகி குமரி பகவதி அம்மன் வரலாறு!!

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் இந்தியாவின் தென்கோடியில் முக்கடல் சங்கமமாகும் இடத்தில் அமைந்துள்ள தீர்த்த ஸ்தலமாகும். “பகவதி” என்பது கேரளப்பகுதிகளில் பெண் தெய்வங்களைக் குறிப்பிடும் முறையாகும் ; இறைவனைப் “பகவான்” என்பதைப் போல, பெண் தெய்வங்களைப் ” பகவதி” என்பர். குமரி மாவட்டம் முன்பு கேரளாவோடு இணைந்திருந்தது அனைவரும் அறிந்ததே. குமரிப் பருவப் பெண்ணாக அம்மன் இங்கே தவம் செய்வதால், இவள் ” கன்னியாகுமரி” எனப்பட்டாள்.

இத்திருக்கோயில் பரசுராமரால் நிறுவப்பட்டு , பின்னர் பாண்டிய மன்னரால் புதுப்பிக்கப்பட்டதாகும். இங்கு பகவதி (சக்தி) குமரியாக (கன்னியாக) நின்று நவராத்திரி திருவிழாவின் கடைசி நாளில் (விஜய தசமி நாளில்) பாணாசுரன் என்ற அரக்கனை அழித்ததாகப் புராணம் கூறுகிறது.

சிவபெருமானை அடைய வேண்டுமென்பதற்காகக் கன்னியான பார்வதிதேவி குமரி முனையிலே நின்று தவம் செய்தமையால் ‘கன்னியாகுமரி’ என்ற பெயர் வழங்கப்பட்டு வருகிறது.

முன்னொரு காலத்திலே, அசுரர்கள், தேவர்களை அடக்கியாண்டனர். தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கியது. அசுர குலத்தலைவனாக விளங்கிய பாணாசுரன் மூவுலகையும் தனக்குக் கீழே கொண்டுவர எண்ணினான். விண்ணவருக்கும், முனிவர்களுக்கும் பூவுலக மாந்தருக்கும் பல்வேறு வழிகளில் தொல்லைகளைக் கொடுத்தான்.

பாணாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத பூமாதேவி திருமாலை வேண்டி நின்றாள். அவளது வேண்டுகோளுக்குச் செவிசாய்த்த திருமாலோ, பராசக்தியை அணுகும்படி கூறினார்.

அதன்படி தேவர்கள், பராசக்தியை வேண்டி, பெரிய யாகமொன்றை மேற்கொண்டனர்; யாகத்தின் முடிவில் வெளிப்பட்ட பராசக்திதேவி பாணாசுரனின் கொடுமைகளை அடக்கி, உலகில் அறமும், ஒழுங்கும் நிலைபெற வழிசெய்வதாக உறுதியளித்தாள். அதற்காகத் தேவி, கன்னிப் பெண்ணாக மாறி பாரதத்தின் தென் கோடிக்கு வந்து தவம் செய்யலானாள் சக்தி. கன்னிதேவி மணப்பருவத்தை அடைந்ததும், சுசீந்திரத்திலிருக்கும் இறைவானாகிய சிவபெருமானுக்குத் தேவியைத் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன.

பிரம்மதேவனோ, அசுரர்களின் தலைவனாகிய பாணாசுரனின் மரணம் ஒரு கன்னியாலேயே நிகழ வேண்டுமென விதித்திருந்தார். இந்தத் திருமணம் நிகழ்ந்தால், பாணாசுரனின் மரணம் சம்பவிக்காமலே போய்விடுமென உணர்ந்த நாரதரோ, திருமணத்தை எப்படி நிறுத்தலாமெனச் சிந்திக்கத் தொடங்கினார். கலகங்கள் விளைவிப்பதில் நாரதரைவிடச் சிறந்தவர் எவருமில்லை என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் நாரதர் கலகம் எப்போதும் நன்மையிலேயே முடியும்.

பகவதி தேவிக்கும் சிவபெருமானுக்கும். நடக்கவிருக்கும் திருமணத்தை நிறுத்த முயன்ற நாரதர் அவர்கள் இருவரையும் அணுகி, குறித்த நாளில் , நள்ளிரவிலான நல்வேளையொன்றில் திருமணம் நிகழ வேண்டுமெனவும், அதற்கு ஆயத்தமாக இருக்கும்படியும் கூறினார். அதன்படி குறித்த நாளன்றிரவு சிவபெருமான் சுசீந்திரத்திலிருந்து தேவியின் இடத்தை நோக்கிப் புறப்பட்டார். பொழுது விடிவதற்குள் திருமணத்தை முடிப்பேன்! எனச் சிவபெருமான், தேவிக்கு வாக்களித்திருந்தாராம். நல்ல நேரம் தவறிவிடக் கூடாதென தேவர்கள் புடைசூழ வந்த வேளையில், வழுக்கம்பாறையென்ற இடத்தில் நாரதர் ஒரு சேவலாக உருக்கொண்டு உரக்கக் கூவினாராம்.( இன்றும் அதன் காலடித்தடம் வழுக்கம்பாறையில் உள்ளது).

சேவலின் கூவலைக் கேட்ட சிவபெருமானுக்கு, இது நாரதரின் விளையாட்டு! எனப் புரிந்தது; ஆயினும் உலக நன்மைக்காக, அரக்கனை அழிக்கத் தேவியானவள் கன்னியாகக் கோபத்தோடு இருத்தல் அவசியம்! என உணர்ந்தப் பரமன், பொழுந்து புலர்ந்து விட்டது. நல்ல நேரம் தவறிவிட்டது என எண்ணி மிகுந்த வருத்தத்துடன் செல்வதைப்போல, சுசீந்திரத்திற்குத் திரும்பிச் சென்றாராம். ஆனால், பொழுது விடிந்தும் சிவபெருமான் வராததால், ஈசனுக்காகக் காத்திருந்த தேவியின் அன்பு வழியும் கண்கள், கோபத்தில் சுட்டெரிக்கும் சூரியனைப் போல் தகதகக்கத் தொடங்கியன.

திருமணத்திற்காகச் சமைத்த அனைத்துச் சாதங்களையும், அரிசி, பருப்பு போன்றவற்றையும் கடற்கரையை நோக்கி வீசியெறிந்தாள்; தேவியின் கோபத்தால் அவை பல நிறங்களை உடைய மணலாக ஆயினவாம். இன்றளவும் வேறெங்கும் காணமுடியாதவாறு பலநிற மணல்களை குமரிக்கடலோரம், முக்கல் சங்கமப் பகுதியில் காணலாம். பின்னர் கோபம் அடங்காமல், தவத்தை மேற்கொள்ள எண்ணினார். தேவி. அந்த நேரம் பார்த்து அங்கு வந்த பாணாசுரன், தேவியின் அழகில் மயங்கி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினான்.

தேவியோ கடும் கோபத்துடன் பாணாசுரனை எச்சரித்தாள்; ஆனால் தன் உடல் வலிமையால் அவளைக் கவர்ந்து செல்ல எண்ணித் தன் உடைவாளை உருவினான் பாணாசூரன். இந்தத் தருணத்தை எதிர்பார்த்திருந்த தேவியும் தன் போர் வாளை வீசிப்பல நாட்கள் போர் புரிந்தாள். இறுதியில் தன் சக்கராயுதத்தால் பாணாசுரனைக் கொன்றாள். தேவர்களும் மனிதர்களும் தேவிக்கு நன்றி செலுத்தினர்.

இந்தப் போரை நவராத்திரி விழாவின் போது சிறப்புற நடத்திக் காட்டுகின்றனர் “பரிவேட்டை” என்று அழைக்கப்படும் இத்திருவிழா காண்போருக்கு மகிழ்ச்சியூட்டும் ஒரு நிகழ்ச்சியாகும். குமரியம்மன் வாளைக் கொண்டு போராடும் காட்சி இக்கோவில் கருவறையின் கிழக்குச்சுவரில் படைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டு உள்ளது.

தேவர்களின் வேண்டுதலால் சினம் தணிந்து, தனது கோப சக்தியை எல்லாம் ஒரு ஒற்றைக்கல் மூக்குத்தியில் இறக்கி அன்னை பகவதி சாந்தமானாள். அவள் குமரியாகவே அங்கு வீற்றிருந்ததால் ‘கன்னியாகுமரி’ என்றே பெயர் பெற்றாள். குமரி அம்மனின் மாணிக்க மூக்குத்தி தனிச்சிறப்புடையது; மிகவும் அரிதானது. இதைப் போன்ற செந்நிற ஒளிய ஒளிவீசும் மூக்குத்தியை வேறெங்குமே காணமுடியாது. இந்த மூக்குத்தியின் செந்நிற தீபம் போன்ற ஒளியை கலங்கரை விளக்கத்தின் ஒளி என்றெண்ணி வந்த கப்பல்கள் கரையில் மோதி விபத்துக்குள்ளானதாம். இன்றும் குமரி கடலில் கப்பலின் உடைந்தப் பகுதிகளைக் காணலாம்.

அதனாலேயே ஆலயத்தின் கடற்கரை நோக்கிய முன் கோபுரவாசல் மூடப்பட்டு வடக்குப்புறமாக வாசல் வைக்கப்பட்டுள்து என்கிறார்கள். ஒளிமிக்க அன்னையின் மூக்குத்தி யோகசக்தியின் வெளிப்பாடு என்பதால் பக்தர்களின் வழிபாட்டுக்கு உரியதாக உள்ளது. இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் பகவதி தாய் நின்று நம்மை பாதுகாத்துக் கொண்டிருக்கிறாள்.
‘நீலத்திரைக்கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி அன்னை’ என்று பாரதி போற்றியவாறு குமரித் தெய்வத்தின் கோவில் கடலோரமாகஅமைந்து காட்சி தருகின்றது. பெரிய நிலப்பரப்பில் நான்குபுறமும் மதில் சுவர்கள் சூழ அந்த கோவில் அமைந்துள்ளது.

பகவதி அம்மனின் கருவறை உள்மண்டபத்திலே அமைந்திருக்கின்றது. இளங்காலைக் கதிரவனுக்கு ஆசி கூறி அருள்வது போன்று குமரித் தெய்வம் கிழக்கு திசை நோக்கிய வண்ணம் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றாள். அவளது மணிமுடியிலே பிறைமதி காட்சி தருகின்றது. அவள் அணிந்திருக்கும் மாணிக்க மூக்குத்தி கண்களைப் பறிக்கும் பிரகாசமுடையதாகத் திகழ்கிறது அதன் செந்நிற தீபம் போன்ற ஒளியானது அன்னையின் உதட்டில் பிரதிபலிப்பதைக் காண கண்கள் கோடி வேண்டும்.( ஆனால் வைரமூக்குத்தி எனத் தவறுதலாகச் சிலர் கூறுகின்றனர்) பகவதி அன்னை தனது ஒரு கரத்திலே இலுப்பைப்பூ மாலையைத் தரித்து, மற்றொரு கரத்தைத் தொடைமீது அமர்த்தி தவக்கோலத்திலே காட்சியளிக்கிறாள்.

பகவதி அன்னையின் மூக்குத்தியில் மின்னும் முகப்பொலிவும், கருணை பொழிந்திடும் இரு கண்களும், புருவங்களும், பரந்த நெற்றியும், அதில் ஒளி வீசித் திகழும் மாணிக்கத் திலகமும், இதழ்களின் கோடியில் தெரிந்திடும் புன்முறுவலும், நிமிர்ந்த தோற்றப் பொலிவும் காண்போர்க்கு ஒரு பேரின்ப விருந்தாக அமையும் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை.

இக்கோவிலின் உள் பிரகாரத்துத் தென்மேற்குக் கோடியில் விநாயகர் சந்நிதி உள்ளது. அங்குள்ள மணி மண்டபம் ஆறு தூண்களைக் கொண்டதாகும். இம்மண்டபத்தின் முன்பாக சபா மண்டபம் அமைந்துள்ளது.
உள்பிரகாரத்தைவிட அகன்ற இடைவெளியுடன் கூடியதாக வெளிப்பிரகாரம் அமைந்துள்ளது. நாள்தோறும் அன்னை பகவதி இப்பிரகாரத்தில் பவனி வருகிறாள்.

கன்னியாகுமரி பகவதி அம்மனை கன்னிகா பூஜை அல்லது சுயம்வர பூஜை செய்து மனம் உருக வழிபட்டால் எத்தகைய தோஷங்கள் இருந்தாலும் விலகி உடனே திருமணம் கை கூடிவிடும். காசிக்கு செல்பவர்கள் இங்கு வந்து சென்றால் கூடுதல் பலன்களை பெற முடியும்.

இக்கோவில் பாரதத்தின் தென் கோடியில் அமைந்துள்ள மிகப்புகழ்வாய்ந்த பகவதி ஆலயம் ஆகும். இங்கு, தமிழகத்தின் பாரம்பரிய உடையான பாவாடை, தாவணியுடன் ஜெபமாலையை கையில் ஏந்தி தவம் செய்யும் நிலையில் பகவதியம்மன் காட்சி தருகிறார். குமரி அம்மன் கன்னியாக நின்று தவம் செய்த தலம் ஆதலால் இம்மாவட்டம் அம்மனின் பெயராலேயே கன்னியாகுமரி குமரி மாவட்டம் என வழங்கப்படுகிறது.

குமரியை அடுத்த பக்கத்து ஊரான கடற்கரையை அடுத்த வாவத்துறை என்ற ஊரை சேர்ந்த மீனவ தாயார் ஒருவருக்கு பகவதி அன்னை சிறுமியாக காட்சி கொடுத்தாளாம்.
தேவி அந்த அம்மாளைப் பார்த்து அம்மா! என்னை உன் பெட்டியில் எடுத்துக் கொண்டு கரையில் விடுவாயா? என்று கேட்டாள். அதற்கு அந்த தாயாரும் சம்மதித்தாள். சிறுமியைக் கூடையில் வைத்து எடுத்து செல்றாள்.

இப்போது ஆலயம் இருக்கும் இடமானது அப்போது பருத்தி விளையும் இடமாக இருந்ததாம். அந்த இடத்தில் கோயில் கொள்ள விரும்பிய தேவி, தீடீரென மிகவும் பாரமாக ஆனாள். சுமையைத் தாங்க இயலாதப் பெண்ணோ, தான் சுமந்து வந்த கூடையை அந்த இடத்தில் இறக்கி வைத்தாள். குழந்தையோ, அம்மனாகக் காட்சியளித்தாள். தான் சுமந்து வந்தது குழந்தையல்ல, தேவி என்பதை புரிந்து கொண்ட பெரியவள் அன்னையை வணங்கி நின்றாளாம்.
அன்னை அந்த இடத்தை விட்டு மறைந்து விட்டாள். அப்பெண் கூறிய தகவலைக் கேட்டு பின்னர் அவ்விடத்தில் கோயில் அமைத்தனராம்.

இன்றளவும் குமரி அம்மனின் தேர்த்திருவிழாவின் போது முதன்முதலில் தேரை இழுக்க அம்மனுக்குக் கயிறை( வடம்) அளிப்பது இப்பெண்ணின் வம்சத்தவரே; இப்போது அவர்கள் கிருஸ்தவர்களாகி விட்டாலும், இன்றளவும் பயபக்தியோடு அம்மீனவ மக்கள் , அம்மனுக்குத் தேர்வடத்தைப் பரிசளிக்கின்றனர் என்பது சிறப்பு; இது தன்னை முதன்முதலில் வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்தியப் பெண்ணிற்கு அம்மன் வழங்கும் முதல் மரியாதையாகும்.

இராமபிரான் ஆழ்க்கடல் கடந்து இலங்கை செல்வதற்கேற்ற இடம் தேடிக் குமரிமுனை வந்து முதலில் பாலம் போட, அது சரிவராததால் அன்னை பகவதியை தரிசித்து அருள் பெற்று இராமேஸ்வரம் சென்றதாகவும், அதுமுதல் குமரித்துறை “ஆதிசேது” எனப்பெயர் பெற்றதாகவும், கோவில் தலப்புராணம் கூறுகின்றது. குமரித்துறையில் நீராடுவோர், “ஆதிசேதோ: கன்னியாகுமரி க்ஷேத்ரே மாதுர் பிதுர் தீர்த்தே” என சங்கல்பம் செய்து கொள்வர். “குரங்கு செய் கடல் குமரியம் பெருந்துறை” என்ற மணிமேகலை ( 6:37) யின் அடிகளை ஆதாரமாக வைத்து வானரப் படைகள் முதன் முதலில் அணைக்கட்டிய இடம் இக்குமரிமுனைதான் எனக் கூறமுடிகிறது. குமரி மாவட்டத்தில் இராமன்துறை, இராமன்புதூர், இராமன்புத்தன் துறை என்ற பெயர்களில் ஊர்கள் உள்ளன.

இக்கோயிலின் தீர்த்தம் _பாபநாச தீர்த்தம்.

முக்கடலும் கூடும் இடம் குமரிமுனை. காசி சென்று வழிபட்டோர், கன்னியாகுமரி வந்து குமரி பகவதியை வணங்க வேண்டும் என்பதே முறையாகும். குமரி முனையில் அதிகாலை சூரிய உதயம், மாலை நேரம் சூரிய அஸ்தமனம் காணுதல் தனிப்பெரும் சிறப்பு. கன்னியாகுமரி மிகச்சிறந்த சுற்றுலா மையம் ஆகும்.

விவேகானந்தர் நினைவு மண்டபம் :
குமரி முனையின் கிழக்கே கடலில் இரண்டு அழகிய பாறைகள் உள்ளன. அதில் பெரிய பாறை சுமார் 3 ஏக்கர் பரப்பும் கடல் மட்டத்தில் இருந்து 55 அடி உயரமும் உடையது. அதில் ஓரிடத்தில் பாதம் போன்ற அடையாளம் காணப்படுகிறது. அதை தேவியின் திருப்பாதம் என்று அழைக்கிறார்கள். 1892-ல் சுவாமி விவேகானந்தர் தனது யாத்திரையின் போது குமரிமுனை வந்து அம்மனை வழிபட்ட பின்பு இப்பாறையில் உட்கார்ந்து தியானம் செய்தார். அவர் நினைவாக இம்மண்டபம் கட்டப்பட்டுள்ளது. சில பௌவுர்ணமி நாளன்று, இக்கடற்கரையில் நின்று மாலைக் கதிரவன் மேலைக் கடலில் மறைவதையும் முழுமதி கீழைக் கடலில் கிளர்ந்தெழுவதையும் ஒரு சேரக் காணலாம்.

திருவள்ளுவர் சிலை : திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு குமரிக் கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரச் சிலை அமைத்துள்ளது. . இந்த சிலை அமைக்கும் பணி 1990, செப்டம்பர் 6இல் தொடங்கப்பட்டு 2000, ஜனவரி 1 இல் திறக்கப்பட்டது.

கன்னியாகுமரியின் முக்கடலானது, புராணங்கள் மற்றும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதத்திலும் கூட, புனிதத் தீர்த்த யாத்திரைக்கு உரிய தலமாகக் கூறப்பட்டுள்ளது. மகாபாரதத்தில் அர்ஜுனன் குமரியின் முக்கடல் தீர்த்தத்தில் நீராடியதாக அர்ஜுனன் தீர்த்த யாத்திரைக்குச் சென்ற பகுதி விளக்குகிறது. இராமாயணமும் ஶ்ரீராமர் முதலில் இங்கிருந்தே இலங்கைக்குப் பாலம் அமைக்க முனைந்ததாகக் கூறுகிறது. இக்கோயில் அமைவதற்கு முன்பிருந்தே அம்மன் இங்கே தவமிருக்கிறாள். குமரி மாவட்டத்தில் ஏராளமான ஆண்களும், பெண்களும் “பகவதி” எனப் பெயரைச் சூட்டிக் கொள்வதுண்டு.

புனிதத் தலமான முக்கடல் சங்கமத்தில், இயற்கை எழில் மிகுந்தக் குமரி மாவட்டத்தில் நித்தம் தவம் செய்யும் குமரி அன்னையைத் தரிசிக்கப் புண்ணியங்கள் பல செய்திருக்க வேண்டும்; அம்மண்ணில் பிறக்கவும், வாழவும் பெரும் பாக்கியம் செய்திருக்கவேண்டும்.

என் குமரி அன்னையே போற்றி! போற்றி!

__கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *