ஶ்ரீமத்பகவத்கீதை:
கீதையின் தன்மை
கீதையிலுள்ள பதினெட்டு அத்தியாயங்களும் “யோகங்கள்” எனப் பெயர் பெறுகின்றன. கண்ணன் கூறிய பதினெட்டு யோகங்களையும், நான்கு யோகங்களில் அடக்கி வைக்கலாம்.
கர்ம யோகம், இராஜ யோகம்,
பக்தி யோகம், ஞான யோகம் என்பனவையே அவை. இந்த நான்கு யோகங்களிலும் ஆரம்ப நிலையில் இருப்பது கர்ம யோகம் என்றும், பிறகு அது இராஜ யோகமாக முதிர்கிறது என்றும் கொள்ளலாம். இராஜ யோகத்திலிருந்து பக்தி யோகம் ஓங்குகிறது என்றும், இறுதியில் அது ஞானமாக முற்றுப் பெறுகிறது என்றும் பொருள்படுத்துவது ஐதீகம்.
நான்கு யோகங்களையும்
கிருஷ்ணர் ஒரே பாங்கிலேயே பொருள்படுத்துகிறார். நான்கு வெண்ணிற குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் அமர்ந்தவாறே, மனம் கலங்கி நின்ற விஜயனுக்குக் கீதையைப் போதிக்கிறார் கிருஷ்ணர். வாழ்க்கை என்னும் இரதத்திற்கு அவர் நான்கு யோகங்கள் என்னும் நான்கு குதிரைகளைப் பூட்டுகிறார்.
வெண்ணிற குதிரைகள் என்பது சாத்வீக இயல்பையும், தூய்மையையும் விளக்குகின்றன. தேர் சரியாக ஓட, நான்கு குதிரைகளும் ஓரே சீராக ஓடவேண்டும். அது நான்கு யோகங்களையும் ஒரே நேரத்தில் கையாளும் போது வாழ்க்கையின் இலட்சியம் இனிதே நிறைவேறுகிறது என்பதைக் காட்டுகிறது. நான்கு யோகங்களையும் சமமாக வழங்குகிற அப் பரமபுருஷனை “யோகேஸ்வரன்” என்பர்.
பகவத்கீதையின் தனிச்சிறப்பு அது சுருதியாகவும், ஸ்மிருதியாகவும் விளங்குகிறது. உபநிஷதங்களைச் ‘சுருதி’ என்பர். செவிவழியாக (கர்ண பரம்பரையாக வருவது கர்ணம்= காது) கேட்கப்பட்டு காப்பாற்றி வைக்கப்பட்டதே சுருதி.
கணிதத்தில் பெருக்கல் வாய்ப்பாட்டை எப்படி யாராலும் மாற்ற முடியாதோ, அப்படியே சுருதிப் பொருளை யாரும் மாற்ற இயலாது. மெய்ப்பொருளை விளக்கும் சுருதி என்றும் மாறாததாகவும், நிலையானதாகவும் இருக்கிறது . “ஸ்மிருதி” என்பது ‘நினைவில் வைத்துக் கொள்ளப்பட்டது’ எனப் பொருள்படும். இவை பரதத்துவங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஸ்மிருதிகள் காலமாற்றத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும்.
பரதத்துவத்துக்கு ஏற்ற வாழ்க்கையை நாம் வாழ்வதே ஸநாதன தர்மம். மற்ற ஸ்மிருதிகள் காலத்திற்கேற்ப மாறியமையும். ஆனால் கீதையை மாறுபாடு அடையாது, என்றும் நிலைத்திருக்கும் மேன்மையைக் கொண்டது. மாறுபாடு அடையும் உலகில், மாறுபாடு அடையாதக் கோட்பாடுகளையே கீதை விளக்குகிறது.
ஆங்கிலத்தில் கீதையின் முதல் மொழிபெயர்ப்பு East India Company ஆட்சியாளர்களால் செய்யப்பட்டது. அந்த மொழிபெயர்ப்புக்கு Warren Hastings என்ற ஆட்சித் தலைவர் கொடுத்திருந்த முன்னுரை இது.
“இங்கிலாந்து ஒரு காலத்தில் இந்திய நாட்டை இழக்க நேரிடலாம். ஆனால் இந்தியாவில் உதித்த இந்த பகவத்கீதையின் கோட்பாடுகளை இங்கிலாந்து பின்பற்றுமானால், இங்கிலாந்து என்றைக்கும் மேன்மையுற்று விளங்கும் என்பதாகும். வாழ்க்கைத் தத்துவத்தின் பெருமையை உணர்ந்த பேரறிஞரின் கூற்று என்றும் பொய்யாவதில்லை.
_கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்.
1 thought on “இந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை! தொடர்-3”