கீதையின் அடிப்படை-2
ஒவ்வொரு சாஸ்திரத்திலும் கோட்பாடு, பயிற்சி (theory, practice) என்ற இரு பகுதிகள் உண்டு. விவேகத்தால் முடிவுகட்டுவது கோட்பாடு (உபபத்தி) எனப்படும். நடைமுறையில் செய்து காட்டுவது பயிற்சி (அனுஷ்டானம்) எனப்படும். சாதாரண மனிதனுக்கு பிரம்மஞானம் என்பது வெறும் கோட்பாடாகவே போய்விடும். அப்பொழுது அவனுக்கு அதனால் எப்பயனும் இல்லை; அது வெறும் வேதாந்தமாகவே இருக்கும்.
பிரம்மஞானம் என்பது வேதாந்தைப் பேசுவது மட்டுமல்ல; அதை வாழ்க்கையில் நடைமுறைபடுத்துவதுமாகும். பிரம்மஞானத்தை பயிற்சிச் செய்தால் அது யோக சாஸ்திரமாகிறது.
பிரம்மஞானத்தை வாழ்க்கையில் எவ்வாறு பின்பற்றுவது என்பதையும், அதைப் பின்பற்றி மேலான ஞானியின் நிலையில் நின்று சாதாரண மனிதவாழ்வையும் எவ்வாறு சிறப்பாக நடத்தலாம் எனவும் கூறுவதே ஶ்ரீமத்பகவத்கீதை.
கீதையில் 18 அத்தியாயங்கள் உள்ளன. கீதையின் ஒவ்வொரு அத்தியாயமும் ‘யோகம்’ எனப் பெயர் பெறுகிறது. மனத்தின் பண்பாடு யோகமாகிறது. சுயநலத்திற்காக மனம் சோர்ந்தோருக்கும், துயருறுவோருக்கும் யோகமில்லை. உலக நன்மையை நினைத்து , பிறரை நினைத்தே அர்ஜுனன் கவலையுற்றதால், கிருஷ்ணர்;
பிரம்மஞானத்தை எளிமையான விதத்தில் அவனுக்குப் போதித்தார். மாபெரும் போர்க்களத்தின் நடுவே கிருஷ்ணர், அர்ஜுனனுக்குப் போதித்ததே பகவத்கீதை.
கீதையை ஒருவர் அறிந்திருந்தால் அவர் வாழ்வில் மேன்மையடைவார்.
“கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே” என்ற கீதையின் அடிப்படையான சாராம்சத்தை
ஒரு மாணவர் தெரிந்திருந்தால் அவர் தேர்வுகளைத் தைரியமாக எதிர்கொள்வார்; மதிப்பெண்களை மட்டுமே நினைத்து தவறான முடிகளை எடுக்க மாட்டார். நன்றாகப் படிப்பது மட்டுமே நம் கடமை; அதன் பலனை எண்ணிப் பார்ப்பதல்ல என்பதில் , கீதையை அறிந்த மாணவர் உறுதியாக இருப்பார்.
ஓர் ஆசிரியர் கீதையை அறிந்திருந்தால், அவர் சிறந்த ஆசிரியராவார். அரசாங்கத்தில் பணிபுரிவோரும், அதை நிர்வகிக்கும் தலைவர்களும் கீதையை அறிந்திருந்தால் நேர்மையான நல்லாட்சியை நடைபெறச் செய்வர் என்பது உறுதி.
_கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்.
தொடர்ந்து படிக்க…
1 thought on “இந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை! தொடர் -2”