- இந்துசமய நூல்கள், தற்போதைய செய்திகள், ஶ்ரீமத்பகவத்கீதை

இந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத் கீதை! தொடர்-1

Spread the love

ஶ்ரீமத் பகவத்கீதை.

1.அறிமுகவுரை:
ஒவ்வொரு மதத்திற்கும் சாஸ்திரம் என்பது அவசியமானது. சாஸ்திரங்கள் இல்லாத மதம் காலவோட்டத்தில் உருமாறி, தனது சுயதன்மையை இழந்துவிடும். நமது சனாதன தர்மத்தில் (இந்து மதம்) எண்ணற்ற சாஸ்திரங்கள் உள்ளன. அவை அனைத்தும் வேதங்களையே அடிப்படையாகக் கொண்டவை.

வேதங்களின் பல பகுதிகள் அழிந்துவிட்டன. ஆனால் வேதங்களில் இருந்து உருவான உபநிஷத்தங்கள் வேதத்தின் சாரத்தை நன்குப் பாதுகாத்து வைத்திருக்கின்றன. மெய்ப்பொருள் ஆராய்ச்சியில் உபநிஷதங்களின் போக்கு எவ்வாறானது என விளக்குவது பிரம்ம சூத்திரம். இதை வேதாதாந்த சூத்திரம் எனவும் கூறுவர். உபநிஷதங்களில் அடங்கியுள்ள கருத்துக்களை எல்லாவற்றையும் தெளிவாகவும், எளிமையாகவும் விளக்குவதே பகவத்கீதை.

உபநிஷதங்கள், பிரம்மசூத்திரம், பகவத்கீதை என்ற மூன்றும் “முடிவான பிரமாண நூல்கள்” (பிரஸ்தானத்திரயம்) என்பர். இந்து மதத்தின் சாஸ்திரம் எதுவென்றால் உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை என்ற மூன்று முடிவான பிரமாண நூல்களே ( பிரஸ்தானத்திரயம்).

பகவத்கீதை, வேத வியாசர் இயற்றிய மகாபாரதம் என்ற இதிகாசத்தில் அடங்கியுள்ளது. இதிகாசம் என்பதற்கு “இது இப்படி நடந்தது” என்பதே பொருள். எனவே இதிகாசம் என்பது வரலறாகும். பண்டைய அகண்ட பாரதத்தில் அடங்கியிருந்த அனைத்து நாடுகளும் பங்கேற்ற மாபெரும் போரே மகாபாரதப் போர். நமது தமிழ் மன்னர்களும் அதில் பங்கேற்றனர். அப்பொழுது கௌரவர்களின் படை ஒருபுறமும்; நியாயம், தர்மம் என்ற கொள்கைகளோடு கூடிய பாண்டவர்களின் படை மறுபுறமுமாகப் போருக்குத் தயாராக “குருஷேத்திரம்” (ஹரியானா மாநிலம்) என்ற இடத்தில் ஒன்று கூடினர்.

மந்திரியும் கௌரவ , பாண்டவர்களின் சிறிய தந்தையும் ,மாவீரரும், நீதிமானுமான விதுரர் போரில் கலந்துக்கொள்ளாமல் தீர்த்த யாத்திரைக்குச் சென்றுவிட்டார். “நான் இரு புறமும் சமமானனே” என்பதே விதுரரின் இம்முடிவிற்குக் காரணம். “அஸ்தினாபுர அரியணையில் வீற்றிருக்கும் மன்னனுக்கு நான் என்றும் கட்டுப்பட்டிருப்பேன், இந்நாடு பாதுகாப்பாக இருக்கிறது என்ற நிலை உருவாகும் வரை உயிரோடு இருப்பேன்” என்று தனது தந்தை சந்தனு சக்ரவர்த்திக்கு வாக்களித்திருந்ததால் வேறுவழியின்றி பீஷ்ம பிதாமகர் உள்ளூர வேதனையோடு கௌரவர்களின் பக்கம் போரிட்டார்.

இந்நிலையில் அர்ஜுனன் தனது உறவுகளையும், குருமார்களையும், பெரியோர்களையும் கண்டு மனம் கலங்கிக் கடும் மன உளைச்சலில் ஆழ்ந்தான். பதட்டத்தில் நாவறண்டுப் போகவும், கையிலிருந்து காண்டீபம் நழுவ, கடும் குழப்பமான மனநிலையில் போரிடத் தயங்கிச் சோர்ந்து, தேர்தட்டில் அமர்ந்தான் அர்ஜுனன்.

.

அவனுக்கு ஞானத்தைப் போதித்து, உண்மையைத் தெளிவுப்படுத்தக் கிருஷ்ணர் கூறிய மெய்ஞான தத்துவங்கள் அடங்கிய நூலே, ஶ்ரீமத் பகவத்கீதை. வாழ்க்கையும் ஒரு போர்க்களமே! கீதையை அறிந்தோர் வாழ்வைக் கண்டு பயங்கொள்ள மாட்டார்கள்; தனது கொள்கையில் திடமாக இருப்பார்கள்; அவர்களால் எச்சூழ்நிலையையும் பதட்டமின்றி சமாளிக்க இயலும்.

தாளாதத் துயரத்தைத்தீர்க்கவும் நோய்க்கு மருந்தைப் போலவும் அர்ஜுனனுக்குக் கண்ணன் அமைந்தான். அர்ஜுனனுக்கு மட்டுமல்ல! வாழ்வின் சிக்கலான கட்டத்தில் குழம்பி நிற்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் கீதை ஒரு வழிகாட்டி. அதைச் சரியாகப் படித்து, பின்பற்றி நடந்தால் நமக்கு மனச் சோர்வு, மனக் குழப்பங்கள் எதுவும் வராது; அவைகள் நமக்கு இருந்தாலும் தீர்ந்துவிடும். மனக் குழப்பம் , மனக்கவலைகளால் வரும் எந்த நோய்களும் நம்மை அணுகாது. இதையே இப்பொழுது வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களும் நம் பாரத்தின் ஞானப் பொக்கிஷமான பகவத்கீதையை ஆராய்ந்து, கண்டுபிடித்துக் கூறுகின்றனர்.

ஶ்ரீமத்பகவத் கீதையில் அர்ஜுனனுக்கும் பகவான் கிருஷ்ணருக்கும் இடையிலான உரையாடல்கள், வாழ்க்கையின் பல்வேறு சூழ்நிலைகளை எவ்வாறு சமாளிப்பது என்பதை சுலோகங்களின் வாயிலாக சுட்டிக் காட்டப்படுகின்றன. இந்த சுலோகங்கள் மூலம் நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்கள் கூட குணமாகும்! என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கிருஷ்ணர் அர்ஜுனனுக்குப் போர்க்களத்தில். போதித்தக் கீதையானது வாழ்க்கையின் எதிர்மறையான சூழ்நிலைகளை சுட்டிக்காட்டி, அவற்றை நேர்மறையான முறையில் சமாளிக்கும் திறன்களைக் கூறுகிறது. இதனால் கடும் மன உளைச்சல், மனக்குழப்பம், கவலை போன்றவைகள் விலகுகின்றன; இதனால் நாள்பட்ட நீரிழிவு போன்ற நோய்கள் கூட குணமாகின்றன! கீதையைப் படித்தால் எச்சூழ்நிலையையும் நிதானமாகக் கையாளும் திறன் ஏற்படும்! என்கின்றனர்! இக்கால ஆராய்ச்சியாளர்கள். ஞானக் கண்ணன் கூறிய கீதை, அரிய உபநிஷதக் கருத்துக்கள் அடங்கிய ஞானப் பொக்கிஷமாகும்.

ஶ்ரீகிருஷ்ணா போற்றி!

__கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்.

தொடர்ந்து படிக்க

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

1 thought on “இந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத் கீதை! தொடர்-1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *