- slide, இந்து பண்டிகைகள், தற்போதைய செய்திகள்

ஆடி மாதத்தில் சிவனை விட அம்மனுக்கே சக்தி அதிகம்! ஏன்?

Spread the love

ஆடி மாதம் சிறப்பு! சிவனை விட அம்மனுக்கே சக்தி அதிகம்!!அம்மனுக்கு உகந்த ஆடிமாதம்

பூமாதேவி பூமியில் ஆண்டாளாக அவதரித்த மாதம் ஆடி மாதமே.

உலக மக்களைக் காக்க பராசக்தி தேவி தவமிருக்க, அவரது தவத்தை மெச்சிய சிவனார், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்கட்டும்! என வரம் கொடுத்தாராம்.

சிவபெருமானுடைய சக்தியை விட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதம் மட்டும் சிவன் சக்திக்குள் ஐக்கியமாகி விடுகிறார்! என்பது ஐதீகம்.

எல்லையற்ற சக்தியுடையவள் அம்பிகை. “ஆயிரம் கண்களையுடையவள் என்பதால், அம்மனை ஆயிரம் கண்ணுடையாள் என்பர். எதுவும், யாரும் அம்மனின் பார்வையிலிருந்து தப்ப முடியாது! என்பதை இது காட்டுகிறது. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயரில் அம்மனை, மக்கள் வழிபடுகினர். அம்மனின் ஆயிரம் பெயர்களை “லலிதா சகஸ்ரநாமம்” கூறுகிறது. அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமையில் லலிதா சகஸ்ரநாமத்தைப் படிப்பது மிகவும் பலன் தரும்.

அம்பிகையைத் துர்க்கை என்ற பெயரிலும் மக்கள் வழிபடுவதுண்டு. “துர்க்கம்” என்றால் ” வழி” அல்லது “கோட்டை” என்பது பொருள்.

மக்களுக்கு நல்வழியைக் காட்டுபவளாகவும், கோட்டையைப் போல பக்தர்களுக்கு வரும் தீமைகளிலிருந்து அவர்களைக் காப்பவளாகவும் இருப்பதாலேயே அம்பிகையைத் “துர்க்கை” என்று பக்தர்கள் போற்றுகின்றனர்.

அம்மனின் கையிலிருக்கும் சூலம் என்னும் ஆயுதம் மூன்று பிரிவுகளையுடையது. எண்ணம், சொல், செயலை இது குறிக்கிறது. மனத்தால் நினைப்பதையே சொல்லவும், சொல்வதையே செய்யவும் வேண்டும்! அவ்வாறு செயல்படுவோர், அம்மனின் அருளைச் சுலபமாகப் பெறலாம்.

படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலைச் செய்பவளும் நானே! எனக்குள்ளேயே சிவனும் ஐக்கியம்! எனக் காட்டவே சூலத்தை அம்மன் தன் கரத்தில் வைத்துள்ளாள்.

ஆதிபாராசக்தியே உலகைப் படைத்தாள் என்றும், அவளே மும்மூர்த்திகளையும் படைத்து, தனது அம்சமாக, முத்தேவியரையும் படைத்து அவர்களுக்குத் துணையாக்கினாள்.

அம்மன் மாதமான ஆடி மாதத்தில் கிராமங்களிலும். நகரங்களிலும் மிக கோலாகலமாக அம்மனை வழிபடுகிறார்கள். ஆடி பூரம், ஆடி பெருக்கு, வரலட்சுமி விரதம். நவராத்திரி, போன்ற விழாக்கள் ஆடி மாதத்தில் கொண்டாடப்பட்டு அம்மனின் புகழைப் பாடுகின்றன.

ஆடி வெள்ளியில் அம்மனுக்கு கூழ் காய்ச்சி வழிபாடு செய்து மக்களுக்கும் கொடுப்பது வழக்கம். நல்ல மழை வேண்டியும், உடல் நலம் வேண்டியும், நோய்கள் வராதிருக்கவும் நம் முன்னோர்கள் அம்மனை வழிபாடு செய்தார்கள். அம்மனுக்கு பிடித்தமானவை வேம்பு, எலுமிச்சை, கூழ். இவை உடல் நலத்தைப் பெருக்கி, வியாதி வராமல் தடுக்கின்றது.
ஆடிமாதக் காற்றில் கிருமிகள் பரவும். அதைத் தவிர்க்கவே ஆடிமாதம் அம்மனை வழிபட்டு, அம்மனுக்குக் கூழ் காய்ச்சிப் படைத்து, அதைப் பக்தர்களுக்கும் வழங்குகின்றனர்.

அம்மனுக்குக் காய்க்கும் கூழில் சீரகம், அதிமதுரம், சின்ன வெங்காயம், சுக்கு, மிளகு, திப்பிலி, குன்னிவேர், உழிஞ்சை வேர், கடலாடி வேர், சீற்றாமுட்டி ஆகிய நாட்டு மருந்துகளை பெடியாக்கி, ஒரு துணியில் கட்டி வைப்பர். அரிசியைக் கஞ்சியாக்கிய பின்னர், அதில் மருந்துப் பொடிகளை பதினைந்து நிமிடங்கள் ஊற வைப்பர். பிறகு அக்கஞ்சியை அம்மனுக்குப் படைத்துவிட்டு, பக்தர்களுக்கு வழங்குவர். இதனால் தொற்று நோய்கள் ஆடி மாதத்தில் பரவாமல் தடுக்கப்படும்.

அம்மன் கோயில்களில் திருவிழாக்களின் போது கன்னிப்பெண்கள் முளைப்பாரி எடுப்பதுண்டு. இதற்காகப் பூந்தொட்டியில் நவதானியங்களை விதைப்பர். பின்னர் விரதமிருந்து கும்மிப் பாடல்களைப் பாடி, ஆடி, தண்ணீர் விடுவர். நன்றாக தானியங்கள் வளர்ந்தால் அதைப் பொறுத்து, அப்பெண்ணுக்கு நல்ல மணவாழ்வு அமையும்! என்பது மக்களின் நம்பிக்கை. திருவிழாவின் போது முளைப்பாரியை சுமந்தபடி பெண்கள் ஊர்வலமாக வந்து நீர்நிலைகளில் கரைப்பர். அம்மனுக்குப் பிடித்த ஆடிமாதத்தில் அம்பிகையை வழிபட்டு வாழ்வில் எல்லா நலங்களையும் பெறுவோம்.

__கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *