- slide, ஆன்மீக செய்திகள், தற்போதைய செய்திகள், புண்ணிய தலங்கள்

200-ஆண்டுகளாக புதரில் மறைந்திருந்த பெருமாள் கோயில்! கல்லூரி மாணவ மாணவிகளின் உதவியுடன் மீட்பு!

Spread the love

200 ஆண்டுகளாக புதரில் மறைந்திருந்த பெருமாள் கோயில்! கல்லூரி மாணவ மாணவிகளின் உதவியுடன் மீட்கப்பட்டது!

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில், பாகசாலை – திருவள்ளூர் மாவட்டம். சென்னை பூந்தமல்லியில் இருந்து சுமார் 45 கி மி.

குசஸ்தலை ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள இத் திருத்தலம் குறைந்த பட்சம் 200 ஆண்டுகளாக வழிபாடு மற்றும் பராமரிப்பு இல்லாமல் மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது.

கோயிலை சுற்றி நான்கு திசைகளிலும் அடர்த்தியான செடி கொடிகள், முட்புதர்கள், மரங்கள் ஆகியவை செழித்து வளர்ந்து கோயில் இருப்பதே வெளி உலகிற்கு தெரியாமல் மறைத்துள்ளன. கோயில் நுழைவாயிலில் மேற்கூரையை துளைத்துக்கொண்டு வளர்ந்துள்ள வேப்ப மரம். தன்னால் இயன்ற அளவு இடிபாடுகளை உருவாக்கியுள்ளது.

மூலவர் விமானத்தை மறைப்பது போல் அதன் முன்பு 100 அடி உயரத்திற்குமேலே வளர்ந்துள்ள அரசமரம் தன் பங்கிற்கு வேர்கள் பரப்பி அர்த்தமண்டபத்தையும் கர்பகிரஹத்தையும் பதம் பார்த்துள்ளது.

சுமார் 2 வருடங்களுக்கு முன், பேரம்பாக்கத்தில் இருந்து மணவூர் செல்லும் வழியில், இப்படி மறைந்திருக்கும் இந்தக்கோயிலை கண்டோம். உள்ளே நுழைவதற்கு வழியே இல்லாமல் வளர்ந்திருந்த முட்புதர்கள். அவற்றை மிகவும் கஷ்டப்பட்டு விலக்கி உள்ளே சென்றால் இடிபாடுகளுடன் இருள் சூழ்ந்த ஒரு மண்டபம். மொபைல் போனில் உள்ள டார்ச் லைட் உதவியுடன் ஆராய்ந்தால், எந்த நேரமும் விழுந்துவிடுவேன் என்று பயமுறுத்தும் மேற்கூரையின் கருங்கற்கள்.

மிகவும் ஜாக்கிரதையாக வெளியே வந்தால், பாகசாலை கிராமவாசிகளின் வரவேற்புக்கு குழு நம்மைக் கடிந்துகொண்டது: “அங்கே ஏன் சார் உள்ளே போனீங்க. நிறைய நாகப் பாம்பு இருக்கு சார்.” நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, நாம் செய்யும் உழவாரப்பணிகள் பற்றி விளக்கினோம்.

அவர்கள் மூலம் இது புராதனமான ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் கோயில் என்று அறிந்துகொண்டோம். இந்த இடிபாடுகளின் காரணமாக மூலவர் திருமேனிகள் அருகில் உள்ள பாலசுப்ரமண்ய ஸ்வாமி திருக்கோயிலில் கடந்த 25 வருடங்களாக பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

பெருமாளின் திருஉள்ளத்தாலும், குருமார்களின் ஆசியுடனும் , இத் திருக்கோயிலை வெளிக்கொணரும் வாய்ப்பு நம் குழுவினருக்கு கடந்த 09.02.2020 அன்று கிடைத்தது.

பிரமிப்பூட்டும் பணி.ஆனால் சரியான திட்டமிடல் மூலம் சற்று எளிதாகியது. வழக்கம் போலவே, RAJALAKSHMI ENGINEERING COLLEGE, THANDALAM நிர்வாகிகள் நமக்கு கை கொடுத்தனர். இரண்டு பேருந்துகளில் NSS பிரிவைச்சேர்ந்த சுமார் 60 மாணவ மாணவியர்கள் Prof Anand Raj அவர்கள் தலைமையில் வந்து இத்திருப்பணியில் கலந்து கொண்டனர்.

பணிகள் துவக்குவதற்கு முன்னால் கிராம மக்கள் ஒத்துழைப்புடன் கோயிலின் வடபுறத்தே இருந்த மின் கம்பிகளின் தொடர்பு துண்டிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் JCB இயந்திரத்தின் உதவியுடன் கோயிலைச்சுற்றி நான்குபுறமும் வளர்ந்திருந்த முட்புதர்களும் களைச்செடிகளும் அகற்றப்பட்டன

கோயிலின் மேற்கூரையில் வளர்ந்துள்ள செடிகளையும், மரங்களையும் வெட்டுவதற்கு, நன்கு பழக்கப்பட்ட ஒரு சிலர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். Chain Saw உபயோகித்து பெரிய மரங்கள் வெட்டும் பொறுப்பை அசோக் குமார் நண்பர்கள் குழு ஏற்றுக்கொண்டது.

வெட்டிய மரங்கள் கோயில் கட்டிடத்தின் மீது விழாமல் கயிறு கட்டி பத்திரமாக கீழே இறக்கி அப்புறப்படுத்தும் பொறுப்பை ராஜலக்ஷ்மி இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் மிகத் திறமையாக கையாண்டனர்.(இது பற்றிய ஓர் அருமையான காணொளி பின்னர் வெளியிடப்படும்). வெட்டிய மரங்கள் மீண்டும் வளராமல் இருப்பதற்கு இயற்கை மருந்து கலவையை பூசினோம்.

முட்புதர்களை அப்புறப்படுத்தியபின் கோயிலின் முகப்பில் உள்ள பலி பீடமும், அதற்கு அடுத்து நுழைவாயிலில் உள்ள 16 கால் மஹாமண்டபமும் வெளியே தெரிந்தது. இடிபாடுகளில் உள்ள மஹாமண்டபத்தை தாண்டி உள்ளே இருக்கும் சிதிலமடைந்த அர்த்த மண்டபம் மற்றும் கருவறை தென்பட்டது. பாதுகாப்பு கருதி யாரும் உள்ளே செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம்.

இரண்டடி அகலமுள்ள கோயில் சுவர்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக உடைய ஆரம்பித்துள்ளன. தெற்குப்பகுதியில் உள்ள சுவர், பைசா நகரின் சாய்ந்த கோபுரம் போல் ஒரு புறமாக சாய்ந்து நிற்கிறது. ஆகையால் அந்த பகுதியில் உள்ள செடி கொடிகளை அகற்ற வேண்டாம் என்று முடிவெடுத்தோம்.

மாலை சுமார் நான்கு மணி அளவில் இயன்றவரை அனைத்து பணிகளையும் முடித்தோம். அனைவர் முகத்திலும் மற்றும் ஒரு கோயிலை மீட்டெடுத்து வெளிக்கொணர்ந்துள்ளோம் என்ற மகிழ்ச்சியே தென்பட்டது.

பாகசாலை கிராம மக்கள் சார்பாக, ஓய்வு பெற்ற VAO திரு சிவப்பிரகாசம் அய்யா அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக, அயராது பணி செய்த மாணவச் செல்வங்களின் எதிர்காலம் பிரகாசமாக அமைய தனது வாழ்த்துக்களையும் வேண்டுதல்களையும் தெரிவித்துக்கொண்டார். அனைவரிடமும் பிரியாவிடை பெற்று நிறைவுடன் சென்னை திரும்பினோம்.

இப்பதிவை பார்க்கும் ஆன்மீக அன்பர்களுக்கு, குறிப்பாக வைணவ அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். இத் திருக்கோயில் வடகலை சம்பிரதாயத்தை சேர்ந்த கோயில். தங்களுக்குத் தெரிந்த இதே ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த மடாதிபதிகள், ஜீயர்கள், ஆச்சார்யர்கள், ப்ரவசன கர்த்தாக்கள் மற்றும் கைங்கர்யபரர்கள் அனைவரிடமும் இத் திருக்கோயிலைப் பற்றி பகிருமாறு வேண்டிக்கொள்கிறோம்.

வெகு விரைவிலேயே திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஸம்ப்ரோக்ஷணம் நடைபெற்று நித்ய பூஜைகள் தொடங்க தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பேஸ்புக் பதிவு லிங்க்

https://m.facebook.com/story.php?story_fbid=2626846007554363&id=1402548489984127

நாராயணா

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

1 thought on “200-ஆண்டுகளாக புதரில் மறைந்திருந்த பெருமாள் கோயில்! கல்லூரி மாணவ மாணவிகளின் உதவியுடன் மீட்பு!

  1. மேலே காணப்படும் திருக்கோவில், அண்ணாமலையார் அறப்பணிக் குழுவினரால் பழைய நிலைக்குக் கொணரப்பட்டது என எண்ணுகிறேன்.  இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள என் நண்பர் கணபதி சுப்ரமணியன், இது போல சிதிலமடைந்த பல கோவில்களைச் அழகாக மீட்டிருக்கிறார் என்று பெருமை கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *