- தற்போதைய செய்திகள், தெய்வீக அவதாரங்கள்

1000 ஆண்டுகளாக ஶ்ரீரங்கத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் ராமானுஜர்! பற்றி பலரும் அறியாத தகவல்கள்!

Spread the love

1000 ஆண்டுகளாக ஶ்ரீரங்கத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் ராமானுஜர்! பற்றி பலரும் அறியாத தகவல்கள்!

ஆயிரம் ஆண்டுகள் முன்பு
ஶ்ரீபெரும்புதூரில் 1,017 ஆம் ஆண்டில் சித்திரை மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார் இராமானுஜர். இவர் இந்து மதம் மற்றும் சமூகத்தைச் சீர்திருத்தம் செய்த வைணவ மகான். இவர் ஆழ்வார்களின் பாசுரங்களை பெருமாள் கோவில்களில் இசையுடன் பாடிட வழிவகுத்தவர். இதனால் இவர் தமிழ் வேதமான திருவாய் மொழியின் “செவிலித்தாய்” எனப் போற்றப்படுகிறார்.

இராமானுஜர் பன்மொழிப் புலமைமிக்கவர். இவர் தமிழ் மறையை தழைக்கச் செய்தவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஜனநாயகம், சமத்துவம், சமதர்மம், சாதி மத பேதமின்மை ஆகிய கொள்கைகளை மக்களிடையே உபதேசித்து அதனை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்.

இவர் ஆன்மிகத்தோடு சமூக ஒற்றுமையையும் வலியுறுத்திய சிறந்தச் சமூக ஆன்மீக சீர்திருத்தவாதி.

ஆதிதிராவிடர்களைத் “திருக்குலத்தவர்” என்று புகழ்ந்தார் இராமானுஜர். இவரை “உடையவர், ஸ்ரீ பாஷ்யக்காரர், எம்பெருமானார், திருப்பாவை ஜீயர், யதிராஜமுனி, இளையபெருமாள்” எனப் பல பெயர்களால் அழைக்கின்றனர். இவர் ஶ்ரீரங்கம் கோவிலின் நிர்வாகத் திட்டங்களை சீரமைத்து, தொகுத்து வகுத்தார்.

இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றான விசிஷ்டாத்துவைதத் தத்துவத்தைத் தோற்றுவித்து, அதை இந்தியா முழுவதும் பரப்பினார் இராமானுஜர். ஏழை எளிய மக்களிடமும் வைணவம் பரவக் காரணமாக இருந்தார்; பரிபூரணமான பக்தியும் சரணாகதியுமே இறைவனை அடைவதற்கான எளிய வழி என்று கூறி மக்களை எளிய வழியில் நெறிப்படுத்தினார் இராமானுஜர்.

தமிழ்நாட்டில் ஶ்ரீபெரும்புதூரில்
சோமயாஜி தீட்சிதர் மற்றும் காந்திமதி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார் இராமானுஜர். இவர் தனது தந்தையிடம் இருந்து வீட்டிலேயே வேதங்களைக் கற்று வந்தார்.
சிறு வயதிலேயே வேதங்களிலும், உபநிடதங்களிலும் இருக்கும் மிக நுணுக்கமான தத்துவங்களை எளிதாகப் புரிந்து கொண்டார் இராமானுஜர். இவர் தனது 16வது வயதில் தஞ்சம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். திருமணமான சிலமாதங்களில் தனது தந்தையை இழந்தார் இராமானுஜர்.

கல்வி கற்கும் ஆர்வத்தினால்
ஸ்ரீ பெரும்புதூரிலிருந்து காஞ்சிபுரத்திற்கு குடி பெயர்ந்தார் இராமானுஜர். இவர் காஞ்சிபுரத்தில் “யாதவ பிரகாசர்” என்கிற பண்டிதரிடம் சீடராகச் சேர்ந்தார். கல்வி, கேள்வி, ஞானங்களில் தேர்ச்சி பெற்றவரான யாதவ பிரகாசர் அளித்தச் சில அத்வைத விளக்கங்களில் இராமானுஜருக்கு உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபம் கொண்டு யாதவ பிரகாசர் இராமானுஜரை கங்கையில் தள்ளி ஜலசமாதி செய்ய எண்ணி காசிக்கு சீடர்களுடன் பயணமானார்.

காசியை நெருங்கும் போது தனது தம்பி கோவிந்தனின் மூலம் குருவின் திட்டத்தை அறிந்து, காசியிலிருந்து காஞ்சிக்குத் தப்பினார் இராமானுஜர். காசியிலிருந்து காஞ்சிக்கு ஒரே நாள் இரவில் பெருமாளின் கருணையால் தப்பித்ததாகக் கூறப்படுகிறது பின்னர் “திருக்கச்சி நம்பி” என்பவரைக் குருவாக ஏற்றார்.

திருக்கச்சி நம்பி வைசிய குலத்தைச் சார்ந்தவர். அது தனது மனைவிக்குப் பிடிக்கவில்லை என்பதைத் அவளது செயல்களின் மூலம் தெரிந்துக் கொண்டார் இராமானுஜர்.

தன் பக்தி மார்க்கத்திற்கும், மனித நேயத்திற்கும் உறுதுணையாக இவள் இருக்க மாட்டாள்! என்று தெரிந்துக் கொண்ட இராமானுஜர் துறவறத்தை மேற்கொண்டார்.

ஆச்சாரிய குரு பரம்பரையில் முதல் ஆச்சாரியர் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாத முனிகள் ஆவார். அவருக்குப் பின் “யமுனாச்சாரியர்” என்ற “ஆளவந்தார்” ஆச்சாரியர் ஆனார். இவர் நாதமுனிகளின் பேரன் ஆவார். அடுத்து வந்தவர் இராமானுஜர் ஆவார்.

ஆளவந்தாரின் அழைப்பை ஏற்று அவரைப் பார்ப்பதற்கு, பெரிய நம்பியுடன் காஞ்சியிலிருந்து புறப்பட்டு காடு, மலை கடந்து ஶ்ரீரங்கத்திற்கு ஓடோடி வந்தார் இராமானுஜர். ஆனால் யமுனாச்சாரியாரின் உயிர் பிரிந்த உடலையே அவரால் காண முடிந்தது. ஆனால் அவருடலில் மூன்று விரல்கள் மட்டும் மூடியிருந்தன. அதனைப் பார்த்த இராமானுஜர் யமுனாச்சாரியாரை மானசீகக் குருவாக ஏற்றுக்கொண்டு மூன்று இலட்சியங்களை நிறைவேற்றுவதாகக் கூறினார். அவை:

1.வேதாந்த சூத்திரத்திற்கு விசிஷ்டாத்துவைத் தத்துவம் முறையில் விளக்கம் எழுதுவது.

2.பாரசர முனிவரின் விஷ்ணு புராணத்தை உலக்கு எடுத்து கூறுவது.

3.விசிஷ்டாத்வைத்தை உலகிற்கு எடுத்து சொல்லி, அறியாமையால் மூழ்கி கிடக்கும் பக்தர்களுக்கு இறை அருள் கிடைக்கச் செய்வது.

இவ்வாறு இராமானுஜர்
சொன்னதும் மூடியிருந்த யமுனாச்சாரியாரின் விரல்கள் ஒவ்வொன்றாகத் திறந்தன. பினனர் பல நாடுகளுக்கும் இராமானுஜர் சென்று தனது விசிஷ்டாத்வைத் தத்துவங்களை எடுத்துரைத்தார்; பண்டிதர்களுடன் வாதம் செய்து வெற்றி பெற்றார். அவரது தத்துவங்களை ஏற்றுக் கொண்ட பல பண்டிதர்கள் அவரின் சீடர்கள் ஆனார்கள்.

ஆளவந்தாரின் ஐந்து சீடர்களில் ஒருவரான திருக்கோட்டியூர் நம்பி என்பவரிடம் நாராயண மந்திரத்தின் இரகசியத்தை கற்க முயன்றார் இராமானுஜர். பதினேழு முறைகள் முயன்றும் முடியாமல் பதினெட்டாவது முறையாக ஶ்ரீரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூருக்குச் சென்று நாராயண மந்திரத்தின் இரகசியத்தைத் தெரிந்துக் கொண்டார்.

ஆனால் திருக்கோட்டியூர் நம்பி, மந்திரத்தின் இரகசியத்தை எவருக்கும் வெளியிடக்கூடாது! என்றும், அவ்வாறு வெளியிட்டால் உனக்கு நரகமே கிடைக்கும் என்றும் இராமானுஜரிடம் சத்தியம் வாங்கினார். இராமானுஜரும் சத்தியம் செய்துவிட்டு, திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தின் மீதேறி நின்றவாறே எல்லோரும் கேட்கும்படி உரக்க நாராயண மந்திரத்தைக் கூறினார்.

குருவின் வார்த்தையை மீறி, நரகத்திற்குச் செல்வாய்! எனக் குரு கூறியபோதும் ‘எல்லோரும் சொர்க்கம் செல்ல, நான் ஒருவன் நரகம் செல்வது என்றால் அது என் பாக்கியம் தான்’ என்று கூறினார் இராமானுஜர்.
இந்த பதிலைக் கேட்ட திருக்கோட்டியூர் நம்பி இந்த எண்ணம் எனக்கு ஏன் ஏற்படவில்லை? என்று வருந்தி அரங்கனின் கருணையையும் இவரின் கருணை மிஞ்சிவிட்டது எனக்கூறி “எம்பெருமானார்” என்று கூறி இராமானுஜரைக் கட்டி தழுவினார்.

இராமானுஜர், ஶ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று அதை முற்றிலும் சீர்படுத்தி, அன்றாடம் நடக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை உண்டாக்கினார். இதனால் அவருக்கு எதிர்ப்புகள் முளைத்து, அவரைக் கொல்லும் முயற்சிகள் கூட நிகழ்ந்தன என்பர்.
தற்போது வைணவக் கோவில்களில் நடைபெறும் பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை வகுத்தவரும் இராமானுஜரே ஆவார். ஶ்ரீரங்க கோயில் நிர்வாகம், வைஷ்ணவ மட நிர்வாகம் இரண்டையும் திறம்பட நடத்தினார் இராமானுஜர்.

ஶ்ரீரங்கம் கோயிலின் உடைமைகளைச் சிறப்புற மீட்டெடுத்து, நிர்வாகம் செய்ததால் திருவரங்கன் இராமானுசரை “உடையவர்” என அழைத்தாராம். ஶ்ரீரங்கத்திலுள்ள தலைமை மடத்திற்கு மடாதிபதியாக வரவேண்டிய விதி முறைகளையும் நெறிப்படுத்தினார் இராமானுஜர்.

ஶ்ரீரங்கத்தைவிட்டுச் செல்ல வேண்டிய சூழல் இராமானுஜருக்கு ஏற்பட்டப்போது, ஶ்ரீரங்கத்திலிருந்து, நீலகிரி காடுகளைச் சென்றடைந்தார் இராமானுஜர். அங்கு நல்லான் சக்கரவர்த்தி என்பவன் அங்குள்ள எல்லாத்தரப்பு மக்களுக்கும் வைணவ மதத்தை கற்று தருவதைப் பார்த்து மெய்சிலிர்த்தார் இராமானுஜர்.

பின்னர் அங்கிருந்து கர்நாடக மாநிலம் செல்லும் வழியில் தொண்டனூர் என்னும் ஊரில் ஏரி ஒன்றை அமைத்தார் இராமானுஜர். பின்னர் அங்கிருந்து மேலக்கோட்டை சென்று பன்னிரெண்டு ஆண்டுகள் தங்கினார். இராமானுஜர். அவ்வூரில் இருந்த அத்வைத்தவாதிகளை வாதில் வென்று வைணவராக்கினார் இராமானுஜர். அவ்வூரில் இருந்த தாழ்ந்த குலத்தைச் சார்ந்தோரைத் “திருக்குலத்தார்” என்று அழைத்து அவர்களுக்கு பூணூல் அணிவித்து வைணவராக்கினார் இராமானுஜர்.

பின்னர் தனது சக்தி அனைத்தையும் ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகத்தில் புகுத்திவிட்டு, திவ்யமந்திரத்தை உச்சரித்தபடியே வைகுண்டம் சேர்ந்தார் இராமானுஜர். இப்போதும் இராமானுஜரின் திருஉடல் ஸ்ரீரங்கம் கோயிலில் அப்படியே உள்ளது.

இராம-அனுஜ என்ற வடமொழிச் சொல்லுக்கு இராமரின் தம்பி எனப் பொருளாகும். (அனுஜ=தம்பி). இவரை “இலட்சுமணரின் அவதாரம்” என்கின்றனர் இறை தொண்டையும், மக்கள் தொண்டையும் இரு கண்களெனக் கொண்டு வாழ்ந்த இராமானுஜரைப் போற்றுவோம்.

கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *