- தெய்வீக அவதாரங்கள்

ஶ்ரீராமன் சீதாதேவியை சந்தேகித்தாரா?

Spread the love

மஹாலட்சுமியின் அம்சமாக, பிரம்மரிஷி குசத்வஜரின் மகளாகப் பிறந்தாள் வேதவதி(வேதவல்லி) . இவள் மஹாவிஷ்ணுவையே மணக்க வேண்டும்! எனத் தவமிருந்தாள். பிரம்மாவிடமிருந்து அளவற்ற வரங்களை வாங்கி வந்த இராவணன், வேள்வித் தீயின் முன் தவமிருந்த வேதவல்லியைப் பிடித்திழுத்தான்.

பாவியே! என்னால் உன் நாடு, நகரம் எல்லாம் அழியும்! எனச் சாபமிட்டு விட்டு அத்தீயிலேயே விழுந்து உயிரைவிட்டாள் வேதவல்லி. அவளது அம்சமும் இணைந்தே சீதையாக அன்னை வந்தாள்! என்பது வால்மீகிராமாயணம்.

இனி துளசிதாசரின் இராமாயணத்தின் படியும், திருப்பதிசாமியின் வரலாற்றின் படியும் வரும் வேதவல்லியின் கதையைப் பார்ப்போம்.
காட்டில் சீதையைத் தூக்கிச் செல்ல, கபட சன்னியாசியின் வேடத்தில் வந்தான் பெண்பித்தனான கொடிய இராட்சதன் இராவணன். அப்பொழுது சீதை ஆசிரமத்தினுள் செல்ல, அங்கே சீதை மறைந்துப் போனாள். வேதவல்லியே சீதையின் உருவில் கபட சன்னியாசிக்கு உணவளிக்க வெளியே வந்தாள். வேதவல்லியைச் சீதை என நினைத்துத் தூக்கிச் சென்று, சிறை வைத்தான் இராவணன்.

வேதவல்லி நீண்ட காலமாகத் தவம் செய்து வல்லமைப் பெற்றவள் என்பதால் அவளது சாபப்படியே, ஏராளமான பெண்களின் வாழ்வைச் சீரழித்தவனும், தன் தங்கை சூர்ப்பனகையின் கணவனையே கொன்ற ஈவுஇரக்கமற்ற கொடிய இராட்சதனான இராவணனை அழிக்க சீதையின் உருவில் சிறையிருந்தாள்.
போரில் இராவணனைக் கொன்ற பிறகு, நிஜ சீதை வெளியே வரவேண்டும்! எனவே இறைவனின் சித்தப்படியே சீதையின் தீக்குளிப்பு நடந்தது.


சீதை நெருப்பில் இறங்கி வரவேண்டும்! என இராமர் நினைத்தார்! உண்மையே. ஆனால் அது தன் மனைவி மீது கொண்ட சந்தேத்தினால் அல்ல.

இராமரை மானைப் பிடித்துத் தரும்படி சீதைத் துரத்தியபோது, இலட்சுமணரைச் சீதையின் காவலுக்கு வைத்துவிட்டு போனார் இராமர். ஆனால் மானாக வந்த அரக்கன் மாரீசனோ, இராமரின் அம்புப் பாய்ந்ததும், ஏ! இலட்சுமணா! ஏ! சீதா! என இராமரின் குரலிலேயே கத்திவிட்டு உயிரை விட்டான்..

எனவே சீதை, இராமர் தான் ஆபத்தில் கத்துவதாக நினைத்து, இலட்சுமணரை உதவிக்குப் போகும்படி துரத்தினாள்.


இது அண்ணனின் குரலல்ல! அண்ணன் இப்படி கத்த மாட்டார். ஆபத்து அண்ணனுக்கில்லை! உங்களுக்குத் தான் வரப்போகிறது! என நான் நினைக்கிறேன்! இது அரக்கர்களின் மாயவேலை! என்று சீதைக்கு எவ்வளவோ எடுத்துச் சொன்னார் இலட்சுமணர்.

ஆனால் பிடிவாதத்தில் பெண்களை வெல்ல யாராலும் இயலாது! நல்லோர்களின் அறிவுரையைக் கேட்காது வலியப் போய் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் அறிவற்ற பெண்களைப் போல, அன்னை சீதாதேவியும் இராமருக்குத் தான் ஆபத்து! என அரண்டுப் போனாள்.
இலட்சுமணரின் எந்தக் கூற்றும் அவள் செவிகளில் ஏறவில்லை. தனது தங்கை ஊர்மிளையின் கணவன் இவன்! என நினையாமலும், நாட்டைத் துறந்து, கட்டிய மனைவியைத் துறந்து, காட்டிற்கு வந்து ஒரு சேவகனைப் போல இத்தனைக் காலமும் பணியாற்றியவன் இவன்! என சிந்திக்காமலும், நம் கணவனின் தம்பி! என்ற மரியாதையைக் கொடுக்காமலும், இலட்சுமணரையே சந்தேகித்து, வாய்க்கு வந்தபடி அவரைத் திட்டி, துரத்தியடித்தாள் சீதை.


நீ இப்பொழுது அண்ணனைத் தேடிச் செல்லாவிட்டால் உடனே, தீயில் விழுந்து நான் சாவேன்! எனச் சீதை மிரட்டியதால், வேறுவழியின்றி இராமரைத் தேடிச் சென்றார் தூயவரான இலட்சுமணர். அவரது தலைமறைந்ததும், பெண்பித்தன் இராவணன் சீதையைத் தூக்கிச் சென்று சிறை வைத்தான்.

இராவணனின் அண்ணன் குபேரன். குபேரனின் மகன் நளகூபரனின் மனைவி ரம்பை. பேரழகியான ரம்பையை, மருமகள் எனவும் யோசியாமல் கெடுத்தான் இராவணன்.
இனி நீ விருப்பமில்லாத எந்தப் பெண்ணைத் தொட்டாலும் தலை வெடித்துச் சாவாய்! என ரம்பை, இராவணனைச் சபித்தாள்.

எனவே உயிர் போய்விடும்! எனப் பயந்தே இராவணன், சீதையைத் தொடவில்லை. நீ ஏன் என் பேச்சை மீறி சீதையைத் தனியே விட்டு ஏன் வந்தாய்? என இராமர், இலட்சுமணரைக் கோபித்தார். இலட்சுமணரின் தயக்கமும், அன்னை வைதேகி உயிரை விட்டுவிடுவதாகக் கூறினார்கள்! எனத் தயங்கியவாறே தம்பி பேசியவிதமும் இராமருக்கு, அங்கே என்ன நடந்திருக்கும்? என்பதைப் புரிய வைத்தது.


ஒரு பெண்ணாக அனைவரும் தலைகுனிந்து நிற்க வேண்டிய இடம் சீதை, இலட்சுமணரைப் பேசிய பேச்சுக்கள். அன்னை வேதேகியே இங்கே பயத்தாலும், மதிமயக்கத்தாலும்
தவழிழைத்துவிட்டாள். ‘என்னுயிர் தம்பி இலட்சுமணனின் தலையின் மீது நெருப்பை அள்ளிக் கொட்டியதைப் போல, அவதூறு பேசினாய் அல்லவா? அதற்குப் பரிகாரமாக நெருப்பில் இறங்கி, உனது பாபத்தைப் போக்கி வா’ என்று நினைத்தே இராமர், சீதையை நெருப்பில் இறங்கச் சொன்னார்.
ஆருயிர் மனைவி தீயில் இறங்கும் போது இராமரின் மனது எத்தனை வேதனைப்பட்டிருக்கும்?.


துளசிராமாயணத்தின்
படி, சீதையின் உருவிலிருந்த வேதவல்லி தீயில் இறங்கி மறைய, நிஜ சீதை தீயிலிருந்து வெளியே வந்தாள்.
வால்மீகி ராமாயணத்தின் படி, அரக்கனின் சிறையிலிருந்தவள் இவள்! என ஊரார் தன் மனைவியைப் பழிக்கக் கூடாது! என்றே வானரங்கள், விபீஷணன் அனைவரின் முன்பாக இலங்கையிலேயே சீதையைத் தீக்குளிக்க வைத்தார் இராமர்.


தன் மனைவி புதுமரலாக வெளியே வருவாள்! என்பது அவருக்குத் தெரியும். சீதையின் மீது இராமருக்குச் சந்தேகம் என்பதே கிடையாது! அது ஊராருக்காக நடத்தப்பட்ட நாடகம். தன்னை ஊரார் சந்தேகக்காரன்! எனப் பழித்தாலும் பரவாயில்லை; தன் மனைவியின் கற்பை யாரும் எவ்விதக் குறையும் கூறிவிடக்கூடாது! என்று, சீதையின் மீது வைத்த அளவற்ற காதலே, இராமரை அவ்வாறு செய்யத் தூண்டியது.
ஶ்ரீராமஜெயம்.

திருப்பதிசாமியின் வரலாற்றில் வேதவல்லி. திருமாலை மணக்க விரும்பி தவமிருந்த நீ, இராமாவதாரத்தில் நான் படவேண்டிய வேதனைகளை எல்லாம் நீயே அனுபவித்தாய்! எனவே இப்பிறவியில் நீ திருமாலை மணந்துக் கொள்! நான் விலகியிருக்கிறேன்! என்று வேதவல்லியிடம் கூறினாராம் அன்னை மஹாலட்சுமி. பிருங்கி முனிவரால் அவமதிக்கப்பட்டதால், திருமாலைப் பிரித்த மஹாலட்சுமி, அவரைப் பிரிந்து திருச்சானூரில் அலர்மேல் மங்கையாக வீற்றிருக்கிறாள். வேதவல்லி ஆகாசராஜன் என்ற மன்னனுக்கு மகளாகப் பிறந்து, பத்மாவதி என்ற பெயரில் வளர்ந்து வந்தாள்.


ஶ்ரீநிவாசப் பெருமாள், குபேரனிடம் கடன் வாங்கி இந்தப் பத்மாவதியையே மணந்தார். பத்மாவதிக்கு வழிவிட்டு மஹாலட்சுமியே ஒதுங்கிக் கீழ்திருப்பதியில் இருப்பதால், முதலில் அவரை வணங்கிவிட்டே பக்தர்கள் ஶ்ரீநிவாசரை வணங்குவர்.


இந்து மதமும் அதன் புராணங்களும் சமுத்திரம் போன்றவை. இராமாயணம் ஒரு கடல். அறிவிலிகள் அதிலிருந்து சிலசிப்பிகளைப் பொறுக்கிவிட்டு, முத்துக்களே இக்கடலில் இல்லை! எனப் பழிக்கின்றனர்.


ஏகப்பத்தினி விரதனாக வாழ்ந்த இராமர் நல்லோர்களின் இதய தெய்வம்! எங்கள் உயிர் மூச்சு. பல பிறவிகளில் புண்ணியம் செய்தோரே ‘ராமா” எனத் துதிக்கவும், இராமாயணத்தைப் படிக்கவும், இராமரை வணங்கவும் இயலும்.
ஜெய் ஶ்ரீராம்!
ஶ்ரீராமஜெயம்!

-கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *