- slide, புராண பெரியோர்கள்

தியாகராஜருக்கு வீடு தேடி வந்து உணவழித்த ஶ்ரீராமன்!

Spread the love

திருவையாற்றில் ஒரு இனியமாலைப் பொழுதில் தனது வீட்டுத் திண்ணையில் ஶ்ரீராமரைத் துதித்தவாறே தியானத்தில் ஆழ்ந்திருந்தார் தியாகராஜ சுவாமிகள்.
அப்பொழுது வணக்கம்! என்ற
குரலைக்கேட்டுக் கண் விழித்தார் தியாகராஜர். கிட்டத்தட்ட எண்பது வயது மதிக்கத்தக்க வயோதிகர் ஒருவரும், அவரின் மனைவியும், சுமார் 20 வயது இளைஞன் ஒருவரும் கைகூப்பி நின்றிருந்தனர் வீட்டு வாசலுக்கு எதிரே. வந்திருந்தவர்கள் வெகு தொலைவிலிருந்து வந்தவர்களைப் போல சற்றே களைப்படைந்துக் காணப்பட்டனர்.
வரவேண்டும்! வரவேண்டும்! வீட்டிற்குள்ளே வாருங்கள்! என அவர்களை வரவேற்று வந்தனம் செய்தார் தியாகராஜர்.


‘மாதா, பிதா, குருவுக்குப் பிறகு வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை தெய்வமாக நினை!’ என்கிறது உபநிஷதங்களும், வேதங்களும். எனவே தியாகராஜர் அவர்களை அன்புடன் வரவேற்று உபசரித்தார். “அதிதி தேவோ பவ.” வயோதிகர் பேச ஆரம்பித்தார்; நாங்கள் வடக்கே நீண்ட தூரத்திலிருந்து தீர்த்த யாத்திரைச் செய்து கொண்டு வருகிறோம்; இனி இராமேஸ்வரம் போக வேண்டும்! பகவான் கருணை வைக்க வேண்டும்! காலையில் எழுந்து நீராடிவிட்டு புறப்படுவோம்; இன்றரவு உங்கள் வீட்டில் தங்கலாம் என நினைக்கின்றோம்; தங்களது அனுமதி கிடைக்குமா? என்றார் அந்த முதியவர்.


எனது பாக்கியம்! தாராளமாகத் தாங்கள் இங்கே தங்கிக் கொள்ளலாம்! என்று மகிழ்வுடன் சம்மதித்தத் தியாகராஜர், தன் மனைவியிடம் இரவில் அவர்களுக்கும் சேர்த்துச் சமைக்கச் சொன்னார். அவர் மனைவியோ, ‘நமக்கே இரவு உணவிற்கு அரிசி இல்லை! இவங்களுக்கு எப்படி உணவளிப்பது என்றும் தெரியவில்லை! சரி! பக்கத்தில் யாரிடமாவது கொஞ்சம் அரிசி கடன் வாங்கிண்டு வருகிறேன்!’ என்று கையில் பாத்திரத்துடன் தியாகராஜரின் மனைவி கிளம்பினார்.
அதைக் கவனித்த முதியவரோ, ‘எங்களுக்காகச் சமைக்க வேண்டாம்! எங்களிடம் தேனும், தினை மாவும் இருக்கிறது; இரண்டையும் பிசைந்து அடை மாதிரி தட்டி, சுட்டுச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்! நாம் எல்லோருமே அதையே சாப்பிடலாம்! என்றார்.


அதன்படியே அன்றிரவில் அனைவரும் தினையடையை உண்டு பசியாறினர். வீட்டுத் தாழ்வாரத்தில் படுத்த விருந்தாளிகளிடம், தியாகராஜர், தீர்த்த யாத்திரையைப் பற்றி விடிய விடியப் பேசிக் கொண்டிருந்தார்! முதியவரும் சளைக்காது அவருடன் இனிமையாக உரையாடிக் கொண்டிருந்தார்! அவர் கூறிய தெய்வீகக் கதைகளைக் கேட்டு உள்ளம் மகிழ்ந்தார் தியாகராஜர்.
விடியலைப் பறைசாற்றிட சேவலும்கூவியது. ‘பொழுது விடிந்து விட்டதே! என்று எழுந்தார் வயோதிகர்; உடனே அவர் மனைவியும் எழுந்தார். உடன் வந்திருந்தத் திடகாத்திரமான இளைஞனும் எழுந்தார்.
‘ நாங்கள் அப்படியே காவிரியில் நீராடிவிட்டு கிளம்புகிறோம்!’ என்றார் முதியவர்; மகாலட்சுமியைப் போல இருந்த அவரது மனைவியும் தியாகராஜரின் மனைவியிடம் கூறிக்கொண்டு, கணவரை அடியொற்றினாள்.
தியாகராஜரும், தன் மனைவியுடன் அவர்களை வணங்கி, வழியனுப்பினார். பின்பு வாசலில் இறங்கி, அவர்கள் கண்ணிலிருந்து மறையும் வரை அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார் தியாகராஜர். சட்டென்று அந்த முதியவர் கையில் கோதண்டத்துடன் இராமபிரானாகவும், அவருடன் வந்த முதிய பெண்மணி சீதா பிராட்டியாகவும், இளைஞன், அனுமனாகவும் காட்சியளித்து மறைந்தனர்
மறுகணம் உடலில் புது இரத்தம் பாய்ந்ததைப் போல உற்சாகத்துடனும், பரவசத்துடனும் தெருவில் ஆனந்தக் கூத்தாடினார் தியாகராஜர். “இராமா! இராமா! நீயா எனது வீட்டுக்கு வந்தாய்? என் தெய்வமே!…. நீயா வந்தாய்? நீண்ட தொலைவிலிருந்து நடந்து வந்ததாகச்
சொன்னாயே! உன்னைத் தூங்க விடாமல் பேசியே இரவு முழுக்கச் சிரமப்படுத்திவிட்டேனே? பாவி நான்! நீ தூங்காததால் உன் மனைவியும், அந்த இளைஞனும் கூட உன்னருகே விழித்திருந்தனரே? மகாபாவி நான்! எனப் புலம்பினார் தியாகராஜர்.
உன் காலைப் பிடித்து அமுக்கி, உன் கால் வலியைப் போக்காமல், பேசிக் கொண்டே இருந்துவிட்டேனே? இரவு நீ கொண்டு வந்ததை நாங்கள் சாப்பிட்டோமே? என் வீட்டில் வறுமை தாண்டவமாடுகிறது! எனத் தெரிந்துக்கொண்டு, நீயே அம்மையும், அப்பனுமாக இருந்து எங்கள் பசியைப் போக்கினாயே! ராமா! ராமா! என்று புரண்டு புரண்டு அழுதார் தியாகராஜ சுவாமிகள்.
அப்பொது அவரிடமிருந்து பிறந்த வசந்தா ராக கீர்த்தனைதான்;
“சீதம்ம மாயம்மா…” என்பது..

ஏழைபங்காளன்! நல்லோர் வழிபடும் ஶ்ரீராமனை வழிபட எத்தனையோ பிறவிகளில் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். மாதவம் செய்தவருக்கும் கிட்டாதப் பாக்கியம் நேர்மையான, உள்ளத்தூய்மையான நல்லோர்களுக்கு கிட்டும்; அதுவே இராமபிரானை வழிபடும் பாக்கியம்.

ராமா! ராமா! ராமா!

இன்னும் எத்தனைப் பிறவிகளை எடுத்தாலும் உன்னை வழிபடும் பாக்கியத்தை எனக்கு அருள்வாய் பரம்பொருளே! பிறவிகள் தோறும் உன் புகழைப் போற்றிப் பாடிடும் பேற்றை எனக்கு அருள்வாய்! என் இதயத்தில் நீங்கா இடம் பிடித்த நாயகனே! நல்லொழுக்க சீலனே! வையகம் போற்றிடும் வைகுண்டவாசனே! ஏகப்பத்தினிவிரதனே! ராமா! ராமா!
காலமெல்லாம் நின் புகழைப் பாடிட எனக்கு வல்லமைத் தந்திடுவாய் புருஷோத்தமனே!.

ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்…
ஶ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம்
ஶ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம்.

-கீதப்பிரியை. உமாராதாகிருஷ்ணன்

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *