- தற்போதைய செய்திகள், மஹாபாரதம்

காலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்! தொடர்- 4

Spread the love

மஹாபாரதம்-4

கங்கை மைந்தர் காங்கேயன்

பாண்டவர்களின் வம்சம்

கங்காதேவி தன் மகனுடன் சென்றபின் சந்தனு மன்னர் மிகவும் மனவருந்தினார். பெரும் துயரம் உள்ளத்தில் இருந்தாலும், நாட்டு மக்களைக் கண்ணெனக் காத்தார் சந்தனு. கொடை, அறம், உண்மை, நேர்மை, பொறுமை, அறிவு, தைரியம் போன்ற குணங்களால் மேம்பட்டு திகழ்ந்தார் சந்தனு. கங்கை மற்றும் மகனின் நினைவால் அடிக்கடி கங்கையின் கரையோரம் உலவி வந்தார் சந்தனு.

பல வருடங்கள் சென்றன! அன்றைய தினம் சந்தனுவின் வாழ்வில் இனியதொரு திருப்பம் ஏற்பட்டது. ஓர் இளம் பாலகன் அம்புகளைக் கங்கையின் மீது தொடுத்து கங்கையின் நீரேட்டத்தையே நிறுத்திக் கொண்டிருந்தான். இந்த அதிசய செயலால் வியப்பில் ஆழ்ந்தார் சந்தனு. இது எவ்வாறு சாத்தியம்? எனத் திகைத்தார். அப்பாலகனைக் கண்டதும் ஏதோ இனம் புரியாத அன்பு தன் உள்ளத்தில் ஊற்றெடுப்பதை உணர்ந்தார் சந்தனு.

எனவே கங்கையை வேண்ட, கங்காதேவி தோன்றினாள். மன்னா! இவன், தங்களின் புத்திரனே. பரசுராமரிடம் தனுர் வேதத்தை (வில்வித்தை) முழுதாகக் கற்றிருக்கிறான்; அனைத்து கலைகளையும், சாஸ்திரக்களையும், வேதங்களையும் கற்று தேர்ந்துள்ளான்; தாங்கள் இனி இவனை அழைத்துச் செல்லலாம்! என்றாள் கங்காதேவி. மகனே! இவரே உன் தந்தை சந்தனு சக்ரவர்த்தி! இனி இவரே உனக்குச் சகலமும்; நீ இவரோடு செல்! என்றாள் கங்காதேவி.

பெருமகிழ்வெய்திய சந்தனு மன்னரும், தன் மகன் காங்கேயனை அழைத்துக் கொண்டு அரண்மனைக்கு வந்தார். கங்கையின் மகன் என்பதால் காங்கேயன் என்ற பெயர் பெற்றாலும், அவரது இயற்பெயர் தேவவிரதன் என்பதாகும். மகனை சபையோருக்கு அறிமுகப்படுத்திய மன்னர், ஒரு நல்ல நாளில் அவருக்கு இளவரசு பட்டம் சூட்டினார். தனக்குப் பிறகு இவனே இந்நாட்டு மன்னன் எனச் சந்தனு அறிவித்தாலும் விதி வேறு கதையைக் கூறியது. அது தேவவிரதன், பீஷ்மரான கதை.

காங்கேயன் ஏன் திருமணமே செய்யவில்லை எனத்
தெரிந்துக் கொள்ள அவரது தந்தை சந்தனுவைப் பற்றி அறிய வேண்டும். எனவே அவரது முழு வம்சத்தைப் பற்றியும் இனிக் காண்போம்.

குரு வம்சம்:

சந்திரனின் மகன் புதன்.
புதனின் மகன் புரூவன் .
புரூவன் மகன் ஆயு.
ஆயுவின் மகன் நகுஷன்.


நகுஷன் ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்து இந்திர பதவியை அடைந்து பின் சப்த ரிஷிகளிடம் சாபம் பெற்று பாம்பாக மாறினான். பின்னர் சாபவிமோசனமும் பெற்றான்.

நகுஷனின் மகன் யயாதி
யயாதிக்கு தேவயானி என்ற சுக்ராச்சாரியாரின் மகளும் சன்மிஷ்டை என்ற அசுர விடபன்மனின் மகளும் மனைவிகளாக இருந்தனர். தேவயானிக்குத் தெரியாமல் சன்மிஷ்டையை மணந்து வாழ்ந்ததால் சுக்ராச்சாரியாரின் சாபத்தினால் இளமையிலேயே முதுமையை அடைந்தான் யயாதி. தேவயானி மூலம் இரு மகன்களும், அடுத்தவளுக்கு மூன்று மகன்களும் இருந்தனர்.

இதில் யாராவது ஒரு மகன் தனது இளமையை உனக்குத் தந்து , உனது முதுமையை அவன் ஏற்க முன்வந்தால் நீ மீண்டும் இளமையைப் பெற்று வாழலாம். நீ விரும்பும் காலத்தில் மீண்டும் உன் மகனுக்கு இளமையை அளிக்கலாம் என சுக்ராச்சாரியார் சாப விமோசனத்திற்கு வழி கூறினார். எந்த மகனும் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற விரும்பாத நிலையில், புரூருவன் மட்டும் சம்மதித்தான். தந்தைக்கு இளமையை அளித்து தான் முதுமையை அடைந்து பெரும் புகழ் பெற்றான் புரூருவன்.

பின்னர் மீண்டும் இளமையை அடைந்து கௌசலையை மணந்து ஜனமேஜயனைப் பெற்றான்! புரூருவன். புரூருவனின் மகன் பிராசீனன்.

பிராசீனன் +சத்தி_ சய்யாதி.
சய்யாதி+ பானுமதி_ சர்வபூமன்
சர்வபூமன்+ சுசந்தி_ ஜயசேனன்
ஜயசேனன்+ சுபத்திரை_ நயுந்தன்
நயுந்தன்+சுதைகுரோதன் குரோதன்+கரந்துவை தேவாபி
தேவாபி+ கன்னிகைஉருச்சகன் உருச்சகன்+சுவாலாதேவி மதிவான்
மதிவான்+ சரஸ்வதி( நதி) திடன் திடன்+ காளிந்தி நலன்
நலன்+இரத்தின மாலை _ துஷ்யந்தன்
துஷ்யந்தன் + சகுந்தலை _ பரதன்
( விஸ்வாமித்திரரின் பேரன். இவர் ஆண்டதால் தான் பாரதம் எனப் பெயர் வந்தது. பரத குலத்திலகா என அர்ஜுனனை அழைப்பர்.)
பரதன்+சுனந்தை பௌமன் பௌமன்+ விசயை சுகோத்திரன்
சுகோத்திரன்+ கௌசலாதேவிஅஸ்தன் அஸ்தன்+சந்தனவதிநிகும்பன்
நிகும்பன்+ சுவேதை _அரசர்மீளி

அரசர்மீளி+ 1.உருக்காதேவி, 2.கௌசலாதேவி, 3.விசாலாதேவி
இவர்களுக்கு 124 மகன்கள். அதில்
சவ்வருணன்+ தபதி(சூரியன் மகள்)_குரு
குரு மிகவும் புகழ் வாய்ந்தவர்.

குரு யாகம் செய்த இடமே “குருஷேத்திரம்” எனப்பட்டது. இது ஹரியானாவில் உள்ளது.

குரு+ சுவாலை-பரீட்சித்து ( இவரது பெயரையே அர்ஜுனனின் பேரனுக்கும் இட்டுள்ளனர்)

பரீட்சித்து+சுபத்திரை -பிரதீபன்
பிரதீபன்+ சுனந்தை_
1.தேவாபி
2.சந்தனு
சந்தனு+கங்கைகாங்கேயன்(பீஷ்மர்) சந்தனு+சத்யவதி(பரிமளகந்தி)
1.சித்ராங்கதன்(திருமணத்திற்கு முன்பே இறந்து விட்டான்)
2.விசித்திரவீரியன்
விசித்திரவீரியன்+
1.அம்பிகை
2.அம்பாலிகை

விசித்திரவீரியனும் இறந்துவிட , சத்யவதிக்குத் திருமணத்திற்கு முன் பராசர் என்ற முனிவருக்குப் பிறந்த வியாசரின் மூலம்
அம்பிகைக்குத் திருதராஷ்டிரன் குருடனாகப் பிறந்தான்.

அம்பாலிகைக்குப் பாண்டு நோயாளியாக (உடல் வெளிறி) பிறந்தான் . இருவரும் ஆரோக்கியமானவர்களாக இருக்க மாட்டார்கள் என வியாசர் கூற மீண்டும் அம்பிகையை ஒரு பிள்ளை பெற சத்தியவதி கூறுகிறாள். மாமியாருக்குப் பயந்து தாசியை அலங்கரித்து அனுப்பத் தாசி வயிற்றில் மாவீரராக விதுரர் பிறந்தார். இதுவே பாண்டவர்களின் முன்னோர் வம்சக் கதை. இனி காங்கேயன் எவ்வாறு பீஷ்மர் ஆனார் எனப் பார்க்கலாம்.

__கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *