- தற்போதைய செய்திகள், மஹாபாரதம்

காலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்! தொடர்- 3

Spread the love

காலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்! தொடர்- 3

மகாபாரதம்-3

பீஷ்மரின் வரலாறு:

இராமரின் இஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த ‘ மகாபிஷக்’ என்ற மன்னன் அரிய பல யாகங்களைச் செய்து தேவருலகில் வாழும் பேறு பெற்றான். அப்போது ஒருநாள் பிரம்மதேவர் இந்திர சபைக்கு வந்திருந்தார். மாமுனிவர்களும், தேவர்களும் அவரை வணங்கிக் கொண்டிருந்தனர். புனிதக் கங்கையும் அங்கே வந்தாள். அவளது அழகில் மயங்கிய மகாபிஷக் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். கங்கையும் அவனைக் காதலுடன் நோக்கினாள். இதைக் கண்ட பிரம்மா இருவரும் பூமியில் மனிதர்களாகப் பிறந்து திருமணம் செய்து ,பின்னர் தேவருலகை அடையும்படி சபித்தார்.

சாபம் பெற்ற மகாபிஷக் சந்திர வம்சத்தில் சந்தனுவாகப் பிறந்தான். அவ்வாறிருக்க , அஷ்ட வசுக்கள் (எட்டு வசுக்கள்) மேரு மலையில் வசிஷ்டரின் ஆசிரமம் அருகே தங்கள் மனைவியருடன் வந்தனர். அங்கே மேய்ந்துக்கொண்டிருந்த ‘சுரபி’ என்ற வசிஷ்டரின் தெய்வீகப் பசுவைப் பிடித்துத் தரும்படி கடைசி வசுவான பிரபாசனின் மனைவி அவனை வற்புறுத்தினாள்.

வேறுவழியின்றி பிரபாசனும் பிற வசுக்களையும் சேர்த்துக் கொண்டு சுரபியை இழுக்க ஆரம்பித்தான். வசிஷ்டரின் பசு கதறியது. இதனால் கோபம் கொண்ட வசிஷ்டர் , நீங்கள் அனைவரும் பூமியில் பிறக்க வேண்டும் எனச் சபித்தார். வசுக்கள் சாபவிமோசனம் கேட்டனர்.

கடைசி வசுவைத் தவிர ஏனையோர் பிறந்ததும், மாண்டு தேவருலகை அடையலாம்.
கடைசி வசு செய்தது மகா தவறு என்பதால் அவன் நீண்ட காலம் பூமியில் பிரம்மச்சாரியாக , நேர்மை வீரம் உடையவனாக, சகல சாஸ்திரங்களையும் கற்றவனாகப் பிறருக்காக வாழ்பவனாக வாழ்ந்து பின் சுவர்க்கம் வந்தடைவான் என்றார் வசிஷ்டர். இதனால் வசுக்கள் பூமியில் பிறக்க வருகிற வழியில் ,கங்கையைச் சந்தித்தனர்.

தாயே கங்கா மாதா! பூமியில் தாங்கள், எங்களுக்குத் தாயாக இருந்து நாங்கள் பிறந்ததும் கங்கையில் போட்டு சாபவிமோசனம் அளிக்க வேண்டும்; பிரபாசன் மட்டும் நீண்ட காலங்கள் பூமியில் வாழ்வார் என்றனர். கங்கையும் சம்மதித்து பூமிக்கு ஓர் அழகியப் பெண்ணாக வந்தாள். அப்பொழுது வாலிபனான சந்தனுவும் கங்கைக் கரைக்கு வந்தான். அதனருகே நின்றிருந்த அழகியப் பெண்ணைக் கண்டு காதல் கொண்டான்.

பெண்ணே! நான் உண்ணை மணம் புரிய விரும்புகிறேன், நீயார்? என்றான் சந்தனு. மன்னா! ஒரு நிபந்தனை உள்ளது. அதற்கு தாங்கள் சம்மதித்தால் நாம் மணம் புரியலாம் என்றாள். சரி என்றான் சந்தனு. மன்னா! . நான் யாரெனக் கேட்கக் கூடாது. நான் எதைச் செய்தாலும் தாங்கள் அதற்குக் காரணம் கேட்கக் கூடாது. என்னைக்கண்டிக்கவும் கூடாது. என்னை தாங்கள் எப்பொழுது மறுத்துப் பேசுகிறீர்களோ, அக்கணமே நான் தங்களை விட்டுச் சென்று விடுவேன் என்றாள் கங்கை.

காதல் மயக்கத்தில் இருந்தச் சந்தனுவும் அனைத்திற்கும் சம்மதித்தான். அவர்களது திருமணம் இனிதே நடைபெற்றது. மகிழ்வாக இருவரும் சிறிது காலம் வாழ்ந்தனர். கங்கைக்குப் புத்திரன் பிறந்தான். சந்தனு மிக மகிழ்ந்தான். ஆனால் கங்கையோ அக்குழந்தையைக் கங்கைநதியில் போட்டு விட்டு வந்தாள். இவ்வாறு ஏழுமகன்களைக் கொன்றாள். இதனால் தாளாதச் சோகத்தில் ஆழ்ந்தான் சந்தனு.
கடைசியில் பின்னாளில் பீஷ்மராகப் போகிற எட்டாவது மகன் பிறந்தான். அதையும் தூக்கிக்கொண்டு நடந்தாள் கங்கை. அப்போது கடும் சினம் கொண்ட சந்தனு நீ பெண்ணா! அல்லது பேயா? ஏன் இவ்வாறு செய்கிறாய்? என்றான்.

மன்னா ! நீங்கள் என் நிபந்தனையை மீறிவிட்டீர்கள். எனவே உங்களை விட்டுச் செல்கிறேன். உங்கள் மகனை வளர்த்துப் பெரியவனாக்கி உங்களிடமே ஒப்படைக்கிறேன் என்றாள் கங்காதேவி.
ஏன் பிரிகிறாய்? என வருந்திய மன்னனுக்கு, தான் கங்கை என்பதையும் அஷ்ட வசுக்களின் சாபத்தையும் கூறினாள்.
இது நமது விதி எனவே வருந்தாதீர்கள்; உங்கள் மகனை மாவீரனாக ஒப்படைக்கிறேன் என்று சந்தனுவை விட்டுப் பிரிந்து மகனுடன் சென்றாள் கங்கை.

__கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *