- slide, பொன் மொழிகள்

உண்மையான கீதையின் சாரம் என்ன தெரியுமா?

Spread the love

கீதையின்சாரம் என்று எங்கும் ஓர் உபதேசம் பரப்பப்படுகிறது.

“எது நடந்ததோ அது நன்றாக நடந்தது…… இன்று எது உன்னுடையதோ அது நாளை வேறு ஒருவனுடையது ஆகிறது…. “

கீதையின் சாரம் அதுவல்ல! கண்ணன் அவதாரமும் அதற்காக அல்ல!
ஶ்ரீமத்பகவத்கீதையின் சாரம் என்பது வேறு! பகவான் கண்ணன் எதற்காக நான் அவதரித்தேன் என்பதை பகவத் கீதையில் இவ்வாறு கூறுகிறார்.

“பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே”

தீயவர்களை வதம் செய்வதற்கு மட்டுமே கிருஷ்ணர் அவதாரம் இல்லை.
அவருடைய அவதார நோக்கமே தீயவர்களை அழித்து, நல்லோர்களைக் காப்பதுமாகும்.

பெரிய பெரிய சாதுக்களும் முனிவர்களும் மற்றும் ஏராளமான பாகவதர்களும் பகவானை தங்கள் கண்ணால் காணவேண்டும் அவனை தினமும் ஆராதித்து இறுதியில்அவன் திருவடியை அடைய வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.

திருமால் யுகங்கள் தோறும் அவதரிப்பதே அந்த மகான்களின், சாதுக்களின், பக்தர்களின் பக்திக்காக தான். அவர்களின் விருப்பப்படி பாடி ஆடி ஆராதித்து இறுதியில் தனது திருவடியை அடையவேண்டும்! என்பதற்காக இறைவன் அவதரிக்கிறான்.

கீதையில் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியது, மகாபாரத யுத்தத்தில் அர்ஜூனனுக்கு கண்ணன் சொன்னதாகும்.
அர்ஜுனன் மாவீரனாக இருந்தப் போதும் தன் எதிர்ப் படையில் அவனுடைய சகோதரர்கள், குரு, பாட்டனார் இருப்பதைக் கண்டு கலக்கமுற்று போர் செய்ய வேண்டாம்; பிச்சை எடுத்துப் பிழைக்கிறேன்! என்று கலங்கி நின்றவனைத் தடுத்து, எது தர்மம்? எது அதர்மம்? என்றும்; “கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே! கர்மபலனில் உனக்கு அதிகாரமில்லை! எனக் கண்ண பரமாத்மா, அர்ஜுனனுக்கு உயரிய உபநிஷக் கருத்துக்களை எடுத்துக் கூறி, அவனை நல்வழிப்படுத்த ஶ்ரீகிருஷ்ணர் கூறியதே ஶ்ரீமத்பகவத் கீதை.

அர்ஜுனனை போல கலங்கி உள்ள நமக்கும் கீதையின் தத்துவங்கள் பொருந்தும். கீதையைப் படித்தால் நமது வாழ்க்கையை பற்றிய தெளிவு பிறக்கும்! பிரச்சனைகள் பலவற்றையும் துணிச்சலோடு எதிர்கொள்ளும் மனோதைரியமும் வரும்.

கீதையின் சாரத்தைக் ஶ்ரீகிருஷ்ணரே இவ்வாறு கூறுகிறார்…..

“ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ | அஹம்த்வா ஸர்வ பாவேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச: ||”

எல்லா தருமங்களின் பலன்களையும் விட்டுவிட்டு எவன் ஒருவன் என்னையே பற்றுகிறானோ, நான் அவனை அனைத்துப் பாவங்களில் இருந்து விடுவித்து முக்தியை அளிக்கிறேன் என்கிறார்! கிருஷ்ணர்.

வியாழக்கிழமை ஒரு தெய்வம் வெள்ளிக்கிழமை ஒன்று சனிக்கிழமை ஒரு தெய்வம் அல்லது உருவம் இல்லாத ஒரு தெய்வத்தை வணங்க வேண்டும் என்றெல்லாம் குழப்பாமல் மிகத் தெளிவாகக் கிருஷ்ணர் கூறுகிறார்! என் ஒருவனையே(மாம் ஏகம்) உறுதியாகப் பற்று! என்கிறார்.

கீதையின் சாரமே பரமபுருஷனான என்னைச் சரணடைந்தால், அனைத்துப் பாவங்களிலிருந்தும் உன்னை விடுவித்துக் காப்பேன்! என்பதாகும்.

அதனால் தான் “சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து” என எல்லா செயலையும் செய்த பின்னர் பக்தர்கள் சொல்கிறார்கள்.
சர்வம் கிருஸ்ணார்பணமஸ்து!


-கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *