- தற்போதைய செய்திகள், தெய்வீக அவதாரங்கள்

ஐயா வைகுண்ட சுவாமியின் உண்மை வரலாறு!! பாகம்-1

Spread the love

“ஐயா சிவசிவ! சிவசிவ! அரகர! அரகரா! என்பதே நாடார் குல மக்களின் தாரக மந்திரம்.!

பாகம்-1
முன்னுரை

குமரி மாவட்டம் திருவாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்திருந்த காலகட்டத்தில், (182 வருடங்களுக்கு முன்) வாழ்ந்தவரே ஐயா வைகுண்டர்.
இவரை வழிபடுவோர் ‘ஐயா வழி’ என இந்து மதத்தில் ஒரு தனிப் பிரிவைப் போல செயல்படுகின்றனர். ஆனால் தீவிர ஐயா வழியினரை விட, அவரைத் தெய்வமாக நன்றியோடும், நம்பிக்கையோடும் வழிபடும் சாதாரண இந்து மக்களே அதிகம். ஐயா வழியினர் ஐயா என எழுதுவதில்லை; மாறாக அய்யா என்றே எழுதுவதுண்டு. இதற்கு ஏதேனும் குறிப்பிட்ட காரணம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ‘ஐ’ என்ற எழுத்திற்குத் தலைவன் என்ற பொருளுண்டு. அய்+யா எனப் பிரித்தால், “அய்” என்பதற்கு எப்பொருளும் வராது. எனவே நான் ஐயா என்றே எழுதுகிறேன். தீவிர வைகுண்ட பக்தர்கள் மன்னிக்கவும். ஐயா வைகுண்டரின் தலைமைப் பதியானது(பதி=கோயில்) குமரி மாவட்டத்தில் சுவாமி தோப்பு என்ற ஊரில் உள்ளது.

வைகுண்டசுவாமியின் அவதாரக் காரணம்
வைகுண்ட சுவாமியின் வரலாற்றை பார்க்கும் முன்னர், அவரது அவதாரம் ஏன் நிகழ்ந்தது? ,என அறிய வேண்டும். அதற்கு அன்றைய காலகட்டத்தில் உள்ள சேர நாட்டு அரசியலை அறிவது முக்கியமானது. தமிழ் மூவேந்தர்களுள் முதன்மையானவர்கள் சேர மன்னர்கள். மிகச் சிறந்த மன்னர்களைக் கொண்ட சேரநாட்டின் நிலைமை, ஐயா வைகுண்டர் அவதரித்தக் காலத்தில் மிகவும் அஞ்சத்தக்க நிலையில் இருந்தது. மன்னர்கள், மக்களுக்காகத் தான் நாம் என்பதை மறந்து, தனக்குப் பிடிக்காத வகுப்பினரை மிகவும் துயரப்படுத்தினர்.
அதில் குறிப்பாகக் குமரிப் பகுதியிலுள்ள நாடார் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். கேரளத்திலோ, ஈழவர் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

இவ்விரு சாதியினரும் மட்டும் ஏன் அதிகம் கொடுமைகளை அனுபவித்தனர்? என்றால், இவ்விரு வகுப்பினரும் நேர்மையே உருவானவர்களாகவும், கடின உழைப்பாளிகளாகவும், அநியாயத்தை எங்கே கண்டாலும் எதிர்ப்பவர்களாகவும் இருந்தனர். எனவே உலகிலேயே எங்குமே இராத மருமக்கள் தாயம் ( மருமக்கள் வழி) என்ற அரசியல் வாரிசு அமைப்பை இம்மக்கள் ஏற்கவில்லை. தந்தைக்குப் பிறகு மகன் தானே பட்டத்திற்கு வரவேண்டும்? ஆனால் அரசரின் தங்கை மகனே ஆட்சிக்குரியவன் என்ற நிலையை மன்னர் மறைந்த இக்கட்டான நிலையில், ஆட்சியைக் கைப்பற்ற முயன்றவர்கள், கொண்டு வந்தனர். இதை நாடார் மக்கள் பெரிதும் எதிர்த்தனர். அக்காலகட்டத்தில் இம்மக்களே மன்னரின் மெய்க்காவலர்களாகவும், படைத்தளபதிகளாகவும் வீரத்துடன் இருந்தனர். எனவே இவர்களை அடக்கவே மன்னர்கள், இன்று நாம் மனதிலும் நினைக்கவொண்ணாத கொடுமைகளை இவர்களின் மீது கட்டவிழ்த்த விட்டனர். இன்னும் விளக்கமாக அக்கால கேரள அரசியலை அறிய சேரநாட்டு மன்னர்களைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

சேர நாடு

கி.பி. 8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சேர நாட்டை சேரமான் பெருமாள் என்ற அரசர் ஆண்டு வந்தார். இவரின் ஆட்சிக் காலம் 36 வருடங்களாகும். குமரி முதல் கோகர்ணம் வரை இந்நாடு நீண்டு கிடந்தது. இதன் தலைநகரமோ, கொடுங்கல்லூரில் இருந்தது. நாட்டின் பல பாகங்களிலும் அரசரின் அரண்மனைகள். இருந்தன. அன்று சேர நாட்டின் சிறப்பைத் தெரிவிக்க #கொல்லம்_வருடம் என்ற புதிய வருடமும் ஆரம்பிக்கப்பட்டது. சேரமான் பெருமாள் மன்னரின் காலத்தில் நாடார் மக்கள் சிறப்புடன் வாழ்ந்திருந்தனர். இவர் குமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் அரண்மனையில் வைத்து , அவர் ஞானமார்க்கத்தைத் தழுவினார்.

எனவே தனது மகன் குலசேகர பெருமாள் அரசாட்சிக்கு உரிய வயது வரும் வரை தனது மருமகன் கேரள பெருமாளை ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்படி செய்தார் .பின்னர் ஓர் அதிசய ஜோதி வழிகாட்ட காவியுடை அணிந்து, துறவறம் பூண்டு சென்றார் சேரமான் பெருமாள். கேரளவர்மாவும் பதவி ஆசையால் குலசேகர பெருமாளை நாட்டைவிட்டு துரத்த பல சதிகளைச் செய்தார். இவரது ஐந்தாண்டு ஆட்சிக்குப் பின் பதவிப் பேட்டியால் சேரநாடு பல கூறாகப் பிரிந்து, பலதரப்பட்ட ஆட்சிகள் ஏற்பட்டன.

ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சேரமான் பெருமாளின் வழிவந்தர்களில் ஒருவரான “ஸ்தாணு ரவிப் பெருமாள்” கோட்டயத்தைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டார். இவரது காலத்தில் கிருஸ்தவ வியாபாராகளுக்கு வியாபார உரிமைகளைக் கொடுத்தார். பின்னர் “ஶ்ரீவல்லப கோதை” என்ற சிற்றரசருக்குப் பின் வேணாட்டை “கோவர்த்தன மார்த்தாண்ட வர்மா” என்ற மன்னர் ஆண்டார். அன்றைய வேணாட்டை ஆண்டு வந்தவர் “பாலமார்த்தாண்ட வர்மா” என்பவராகும். கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வேணாட்டை ஆண்ட “வீர கேரள வர்மா” அரசர் திருவிதாங்கோட்டை தலைநகராகக் கொண்டிருந்தார். கி. பி. 1661 ஆம் ஆண்டில் வேணாட்டை “ஆதித்யவர்மா என்ற அரசர் ஆண்டு வந்தார். அவர் காலத்தில் வேணாடு ஆரல்வாய்மொழியிலிருந்து, கொல்லம் வரைப் பரவியிருந்தது.

சேரமான் பெருமாள் காலத்திலிருந்து நாடார் குல மக்களை வலங்கையர் என்ற பட்டப் பெயரால் அழைத்து வந்தனர். வலங்கையர் என்றால் ஷத்திரியர்; அதாவது “நாடாண்ட வம்சத்தினர்” என்று பொருள். வேணாட்டின் தென்கோடியில் நாஞ்சில்நாடு உள்ளது. இந்நாட்டைப் பல குறுநில மன்னர்களும் ஆண்டுள்ளனர். பெரும்பாலும் இப்பகுதியை வேணாட்டு அரசர்களே ஆண்டு வந்துள்ளனர்.
மருமக்கள் வழி ஏற்படக்காரணம்

ஏறக்குறைய 260 ஆண்டுகளுக்கு முன்னர் இந்நாட்டை இராமவர்மா என்ற அரசர் ஆண்டு வந்தார். இவர் சேர வம்சத்தினர். இவர் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களுக்கு சில சலுகைகளை அழித்து வியாபாரம் செய்ய அனுமதித்தார். இவரால் ஆங்கிலேயர்கள் அப்பகுதியில் காலூன்றினர். இவர் ஆட்சிக்கு வரும் முன்னர் காஞ்சிபுரத்திற்குப் பரிவாரங்களோடு பயணம் சென்றார்.

காஞ்சிபுரத்தில் அபிராமி என்ற இளவரசி பேரழகியாக இருந்தாள். அவளது அழகில் மயங்கிய இராமவர்மா, “உனக்குப் பிறக்கும் மகனுக்கே அரசுரிமையைத் தருவேன்” __என வாக்குறுதிக் கொடுத்து அவளை மணந்துக் கொண்டு நாடு திரும்பினார். பின்னர் நாட்டில் ஏற்பட்ட பெரும் குழப்பங்களுக்கு மறைமுகமாக இவரும் காரணமாகிவிட்டார். இவரது சகோதரி மகனே அரசாட்சியை முறையற்று கைப்பற்றிய மார்த்தாண்டவர்மா .


(இவரது அரசியல் சூழ்ச்சியில் நாடார், ஈழவர் மக்கள் பலியான வரலாறு தொடரும்….)

ஐயா சிவசிவ! சிவ சிவ! அரகர அரகரா
_கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்.

ஐயா வைகுண்ட சுவாமி வரலாறு

( கொடூர மன்னர்களை எதிர்த்து புரட்சி செய்த கலியுக அவதாரம் ஐயாவைகுண்ட சுவாமி)

இராமவர்மா பதவிக்கு வரும்முன்னர் காஞ்சிபுரத்திற்குச் சென்றார். அங்கே அபிராமி என்ற நாடார் குல இளவரசியின் பேரழகில் மயங்கிய இராமவர்மா மன்னர், நீயே என் மகாராணி! உனக்குப் பிறக்கும் மகனுக்கே அரசுரிமையைத் தருவேன்! எனக்கூறி, அவளைத் திருமணம் செய்துகொண்டு நாட்டிற்குத் திரும்பினார். இவர்களுக்குப் பப்புத்தம்பி, இராமன் தம்பி என்ற இரு மகன்கள் பிறந்தனர். இதன் பிறகே இராமவர்மாவிற்கு மகாராஜாவாகப் பட்டம் சூட்டப்பட்டது. இவர் ஆறு வருடங்கள் அரசராக இருந்தார். இவரது காலத்திற்குப் பிறகு ராணி அபிராமியின் மூத்தமகன் பப்புதம்பிக்குப் பட்டம் சூட்ட வேண்டும்.

ஆனால் மகாராஜா எங்கிருந்தோ மணந்து வந்த பெண்ணிற்குப் பிறந்தவர்களுக்கெல்லாம் பட்டம் சூட்டமுடியாது என பிரச்சனையைக் கிளப்பினார்! மன்னரின் சகோதரி மகனான மார்த்தாண்டவர்மா. மன்னரின் மறைவிற்குப் பின்னர் நாட்டில் நிலவியக் குழப்பத்தைப் பயன்படுத்தி அரசுரிமையைக் கைப்பற்றினார் மார்த்தாண்டவர்மா. வஞ்சகம், சூது, நிலைமைக் கேற்ப அனைவரையும் வசப்படுத்துதல், வீரம் எல்லாம் கைவரப் பெற்ற கைதேர்ந்த அரசியல்வாதியாகத் திகழ்ந்தார்! மார்த்தாண்டவர்மா. எனவே அரசின் பிரமுகர்களையும் தன்வசப்படுத்திக் கொண்டார் மார்த்தாண்டவர்மா. அரசருக்குப் பின்னர், அவரது சகோதரி மகனே அரசாளவேண்டும்; இனி இந்நாடு மருமக்கள்வழியையே பின்பற்றும் என அறிவித்தார் மன்னர்.

மிகுந்த செல்வாக்கோடு இருக்கும் மன்னர் மனத்தைக் குளிர்வித்து நடந்தால், நமக்கும் பெரும் ஆதாயம் கிடைக்குமென மக்களில் பெரும்பாலோர் நினைத்தனர். எனவே அவர்களும் மன்னரைத் தொடர்ந்து, தங்கள் இனத்திலும் இனி மருமக்கள் வழியே தொடரும்! என்ற முடிவுக்கு வந்தனர். அவ்வாறு இரு உயர்வகுப்பினர் அவ்வழியைத் தங்கள் சாதியிலும் புகுத்தினர். (ஒரு வகுப்பினர் குமரிப் பகுதியில் பெரும்பான்மையாக வாழ்பவர்கள்; இன்னொரு வகுப்பினர் கேரளத்தில் பெரும்பான்மையாக இருப்போர். )ஆனால் இயல்பிலேயே கடும் உழைப்பாளிகளாகவும், நேர்மையானவர்களாகவும் வாழ்ந்து வந்த நாடார் இன மக்களும், கேரளத்து ஈழவர்களும் இந்த முறையற்ற #மருமக்கள்வழி என்ற முறையைக் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் இது ஏற்கனவே எங்கள் வம்சத்தில் உள்ள மரபே. சேரமான் பெருமாள் மகாராஜா, துறவியாகி சென்ற போது சகோதரி மகனிடம் தானே அரசை ஒந்படைத்தார்? எனவே எங்கள் முன்னோர்களின் வழியே மருமக்கள்வழி தான் ! என்றார் மார்த்தாண்ட வர்மா. ஆனால் அவரது மகன் வயதில் மிக இளையவராக இருந்ததாலும், அரசாட்சியை ஏற்க அவரது இரு மனைவியரும் ஒப்புக் கொள்ளாததாலும் சேரமான் பெருமாள் மன்னர், வேறுவழியின்றி, தன் சகோதரி மகனான, கேரளப் பெருமாளிடம் ஒப்படைத்து, தன் மகன் உரிய வயது வரும்வரை நாட்டைக் காக்கச் சொன்னார். ஆனால் பின்னர் அவரும் அரசாட்சிக்கு வந்த பின்னர், அரசுக்கு உரியவரான குலசேகரப் பெருமாளைக் கொல்ல, பல திட்டங்களைச் செயல்படுத்தினார்.

இதனால் சேரநாட்டில் பல கலகங்களும் ஏற்பட்டு சேரநாட்டில் பல அரசுகள் தோன்றின. அதிலொன்றே இந்த வேணாடு. எனவே முந்தைய வரலாறு மீண்டும் திரும்பியக் கதையாக வஞ்சகமும், மதியூகமும், வீரமும் உள்ள மார்த்தாண்ட வர்மா வேணாண்டின் அரியாசனத்தில் மிக வலிமையாக அமர்ந்துகொண்டார். தனக்குப் பக்கபலமாக இருந்த வகுப்பினருக்கு உயர் பதவிகளை வழங்கினார்! மார்த்தாண்டவர்மா.

ஆனால் மறைந்த மகாராஜா கொடுத்த வாக்கின்படியும், ஷத்திரிய (அரச) தர்மப்படியும் ஒரு மன்னருக்குப் பின்னர், அவரது வாரிசே அரசாளவேண்டும். திருமணமாகி வேறு அரசுக்குச் சென்ற பெண்ணின், மகனுக்கு எப்படி அரசுரிமைப் போகும்? இது அதர்மம்! உலகில் எங்குமே இல்லாத அநீதி! இது மறைந்த மன்னரின் வாக்கை, அவரது வாரிசை, நடுத்தெருவில் நிற்கவைக்கும் செயல்! என நாடார்களும், ஈழவர்களும் கூறினர்.

மார்த்தாண்டவர்மாவுக்கு எதிராகப் பப்புத்தம்பி, தனக்குதவிய நாடார் மக்களோடு இணைந்து படையைத் திரட்டி, மார்த்தாண்டவர்மாவை எதிர்க்க ஆரம்பித்தனர். அதனால் நாடார் மற்றும் ஈழவ மக்களைக் கொடூரமாகக் கொடுமைப்படுத்த ஆரம்பித்தார்! மார்த்தாண்ட வர்மா.

ஐயா சிவ சிவ! சிவ சிவ! அரகரா அரகரா!

__கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்.

ஐயா வைகுண்ட சுவாமி வரலாறு

கொடூரமன்னர்களை எதிர்த்து
போராடிய வைகுண்ட சுவாமி

மறைந்த மன்னர் இராமவர்மாவின் வாரிசுகளான பப்புத்தம்பி, இராமன் தம்பி ஆகியோருக்கு அரசுரிமை இல்லை! என மார்த்தாண்ட வர்மா அறிவித்தார். தன்னை ஆதரிக்கும் சக்திமிக்க வகுப்பினருக்கு அதிகாரத்தை வழங்கினார். மன்னரின் நேரடிவாரிசான பப்புத்தம்பியோ உள் நாட்டில் தங்களுக்கு ஆதரவு தேடினர். அவர்களுக்கு நாடார் மற்றும் ஈழவர் மக்களும் மார்த்தாண்டவர்மாவின் அதர்மத்தை எதிர்த்துப் போரிடத் திரண்டனர். குமரி மாவட்டத்தில் கல்குளம் தாலுகாவில் சரோடு கிராமத்தைச் சேர்ந்த அனந்தபத்மநாடாரின் தலைமையில் ஒரு பெரும் படை திரண்டது. அப்படையில் பெரும்பான்மையினராக நாடார் மக்களே இருந்தனர். மார்த்தாண்ட வர்மா திரட்டி வைத்திருந்த சில உயர்வகுப்பினருக்கும், இப்படைக்கும் இடையே ஆங்காங்கே சண்டை ஏற்பட்டது. மார்த்தாண்டவர்மா உயிருக்கும் பல சந்தர்ப்பங்களில் ஆபத்து ஏற்பட்டது.

பலநேரங்களில் மார்த்தாண்டவர்மா உயிருக்குப் பயந்து, குடிமக்கள் இல்லங்களில் கூட ஒளிந்திருந்த காலமும் ஏற்பட்டது. ஆனால் அந்நேரங்களில் மன்னராயிற்றே! என இரக்கப்பட்டு, அவருக்குப் பாதுகாப்பு அளித்ததும் நாடார் மக்களே. குமரிப் பகுதியில் நாடார்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஓரிரு ஊர்களில் மன்னர் சில நாட்கள் பப்புத்தம்பி குழுவினருக்குப் பயந்து ஒளிந்திருந்தார். தனக்குப் பாதுகாப்பு அளித்த குடும்பத்தாருக்கு பெரும் சொத்துக்களையும், பட்டங்களையும் வழங்கிக் கௌரவித்தார் மார்த்தாண்டவர்மா.

அதனால் அவர்கள் மார்த்தாண்டன் என்ற பெயரைத் தங்கள் வழியினருக்கு வைத்துக் கொள்ள மன்னர் அனுமதியளித்தார். “மாறச்சன்” எனத் தன்னைக் காத்த சில குடும்பங்களுக்குப் பட்டமளித்தார் மன்னர். மலையாளத்தில் “அச்சன்” என்றால் “தந்தை” எனப் பொருள். எனக்கு இன்னொரு தந்தையைப் போல இருந்து, என்னைக் காத்தீர்கள்! என நன்றியோடு இப்பட்டத்தை அளித்தார் மன்னர்.

எனவே ஒட்டுமொத்த நாடார் மக்களும் அவரை அழிக்கச் செயல்படவில்லை. நேரிடையாகப் போர்புரிந்து எதிர்த்த மக்கள் பெரும்பாலோனோர்! என்றால், ஒரு சிலர் வஞ்சகமாக மன்னரைக் கொல்லவும் முடிவெடுத்து செயல்பட்டனர். ஆனால் அவரை அதிலிருந்து காத்ததும், இரக்கமுள்ள சில நாடார் மக்களே. மன்னர் அளித்தப் பட்டங்களை இன்றளவும் பெருமையாகத் தன் பெயரோடு, அதை இணைத்துக் கொள்வதும், “மார்த்தாண்டன்” என்ற பெயரைச் சமீப காலம்வரைத் தங்கள் வாரிசுகளுக்குப் பெருமையோடு வைத்துக் கொள்வதுமாக, அந்தக் குறிப்பிட்ட குடும்பங்கள் செயல்பட்டன.

இவ்வாறு மார்த்தாண்டவர்மாவின் அரசியல் களம் சில காலங்கள் சென்றது. மறுபுறம் உள்நாட்டு சண்டையை மட்டுமே நம்பாமல், பப்புத்தம்பியும், இராமன்தம்பியும் பாண்டாய நாட்டு ஆதரவை நாடினர். திருச்சிக்குச் சென்று ஆங்கிலேய கவர்னரைச் சந்தித்து, தங்கள் நிலையைக் கூறி ஆதரவு தேடினர். உலகில் எங்குமே இராத மருமக்கள்வழி என்ற அநியாயத்தை எடுத்துக்கூறி, புறவாசல் வழியாக அரியணை ஏறிய மார்த்தாண்ட வர்மாவை விரட்ட உதவி கோரினர். மன்னரின் வாரிசுகள் என்றதால், அவர்களை மரியாதையாக வரவேற்றார் கவர்னர். அழகப்ப முதலியார் என்பவரின் தலைமையில் ஒரு படையைத் திருவிதாங்கூருக்கு அனுப்பி வைத்தார் கவர்னர். மார்த்தாண்டவர்மா, தம்பி சகோதர்களிடம் அரசுரிமையை ஒப்படைக்க வேண்டும்! மறுத்தால் போரிட்டு, அரசுரிமையைப் பப்புதம்பிக்கு வழங்கும்படி தனது படைத் தலைமைக்குக் கூறியனுப்பினார் கவர்னர். கவர்னர் அனுப்பிய படையும் ஆரல்வாய்மொழி வழியாகத் திருவிதாங்கூருக்குள் நுழைந்தது.

வரலாறு தொடரும்…

கேரள அரசியல் கள விவரங்கள் சிறிது சென்ற பின்னரே, நாடார் மக்களை, மார்த்தாண்டவர்மா படுத்திய கொடுமைகள் வரும். கொடுமையின் உச்சத்தை அனுபவித்த நாடார் மக்கள், தங்களைக் காக்க வரவேண்டும்!

காக்கும் கடவுளே ! எனக் கடவுளை மன்றாடவே, இறைவன் கலியுக அவதாரமாக ஐயா வைகுண்டராக அவதரித்த வரலாறு சொல்லப்படும். அதுவரை மன்னர்களின் அரசியல் கள நிலவரங்களும், அவர்கள் செய்த கொடுமைகளுமே வரும்.

வாசகர்கள் ஐயாவின் வருகைக்குப் பொறுத்திருக்க வேண்டும்.

__கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்.

தொடர்ந்து படிக்க…

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *