- ஐயா வைகுண்டார், தற்போதைய செய்திகள்

ஐயா வைகுண்ட சுவாமி உண்மை வரலாறு!! பாகம்-2

Spread the love

(கொடூர மன்னர்களை எதிர்த்துப்போராடிய வைகுண்டர்

திருச்சி கவர்னரின் தூதராக வந்த அழகப்ப முதலியார், மார்த்ண்டவர்மாவிற்குத் தகவல் அனுப்பினர். தந்தைக்குப் பின்னர் மகனுக்குத் தானே அரசுரிமை வரவேண்டும்? எனவே உடனே பப்பத்தம்பிக்கு அரசாட்சியைக் கொடுக்கவேண்டும்! என்றார் கவர்னரின் தூதுவர்.
தனது பிரதிநிதியாக மன்னர் இருவரை அனுப்பி வைத்தார். அவர்கள் திருவாங்கூர் அரசு மருமக்கள் வழியைப் பின்பற்றுவது! மக்களும் எங்களையே ஆதரிக்கின்றனர்! என்றனர். அழகப்பமுதலியாரும் மக்கள் பிரதிநிதிகளைப் பலரையும் விசாரிந்தறிந்தப் பின் நாடார் மக்களைத் தவிர ஏனையோர் மார்த்தாண்டவர்மாவை ஆதரிப்பதை உணர்ந்தார். எனவே பப்புத்தம்பி, இராமன்தம்பியை அழைத்து, பெரும்பான்மை மக்கள் மன்னரையே ஆதரிப்பதால் எதுவும் செய்ய இயலாது! எனவே இதை இத்துடன் விடுங்கள்! எனக்கூறிச் சென்றார் கவர்னரின் தூதுவர்.

ஆனாலும் நாடார் மக்களின் மீதிருந்த பயம் விலகாத மன்னர், தனது படைபலத்தை நன்கு பெருக்கினார். நாடார் மக்களைத் தவிர பிற மக்களைக் கவர பலவகைகளிலும் முயன்றார்! மன்னர். மார்த்தாண்டவர்மாவை வீழ்த்தும் முயற்சிகளை தம்பி சகோதர்கள் விடவில்லை. தங்களுக்கு உதவிய சிலரின் துணையுடன் மார்த்தாண்டவர்மாவைக் கொல்ல பல சதித் திட்டங்களையும் செயல்படுத்தினர். ஒருமுறை மன்னர், குமரிப் பகுதிக்குப் பல்லக்கில் இரவு நெருங்கும் வேளையில் வந்தார். அப்பொழுது தம்பி சகோதர்கள் இதையறிந்து பல்லக்குத் தூக்கிகளிடம் ஒரு சதித்திட்டத்தைக் கூறியிருந்தனர்.

பார்வதிபுரத்தை அடுத்த “கள்ளியம்காடு” பகுதியில் வரும்பொழுது நீங்கள் தீவட்டியை அணைத்துவிட வேண்டும்! நாங்கள் பல்லக்கைச் சூழ்ந்து, அவரைக் கொல்வோம்! என்பதே அது. திட்டத்தின்படி பல்லக்குத்தூக்கிகளும் தீவட்டியை அணைக்க, மிக்க மதிநுட்பமும், எச்சரிக்கை உணர்வுமுள்ள மன்னரோ, “பந்தம் அணையுது எந்தானு?” (பந்தம் அணைந்தது எதனால்?) எனக் கேட்டாராம்.

“பனி வெள்ளம் பொழியுது தம்பிரானே!” ( பனிப் பொழிகிறது அரசே!) எனச் சேவகர்கள் கூறவும், இதில் ஏதோ சூதுள்ளது! என உணர்ந்த மன்னர், பல்லக்கிலிருந்து குதித்தோடி கள்ளியம்காட்டு (தற்போது “சிவபுரம்”) சிவன் கோயிலில் தஞ்சமடைந்தார்.

நிலைமையை அறிந்த பூசாரியோ, விரைவாகச் செயல்பட்டு, தனது ஆடைகளை மன்னரை அணிந்துக் கொள்ளச் செய்தார்; மன்னரின் ஆடைகளைத் தான் அணிந்துக் கொண்டு, தலையில் கிரீடத்துடன் நின்று சிவபெருமானை வணங்கும் நிலையில் நின்றிருந்தார். மன்னரைக் கொல்ல தேடி வந்த தம்பி சகோதர்கள், கோயிலுக்குள் நுழைந்து, ஓடிச் சென்று மன்னர் வேடத்திலிருந்தப் பூசாரியை வாளால் வெட்டி வீழ்த்தினர். கருவறையில் பூசாரியின் ஆடையில் நின்று பூஜை செய்துக் கொண்டிருந்த மன்னர் தப்பித்தார். மன்னரைக் கொன்றுவிட்டோமென சகோதர்கள் ஓடிவிட, தனக்காக உயிரை விட்ட அந்தண பூசாரியின் தியாகத்தை நினைத்து மனமுருகினார் மார்த்தாண்டவர்மா

எனவே இதற்குப் பரிகாரமாகவும், தன்னைக் காத்த ஓர் அந்தணரின் தியாகத்திற்காகவும், தனது அரண்மனையில் ஊட்டுபுரா (உணவு உண்ணுமிடம்) என ஒரு தனி இடமே ஒதுக்கித், தினமும் அந்தணர்களுக்கு இலவசமாக அன்னதானமளித்தார்! மகாராஜா. தன்னை ஒருமுறை காத்த அந்தணருக்காக, அனைத்து அந்தணர்களையும் நன்குக் கவனித்தார் மன்னர். ஆனால் தன்னை இருமுறை காப்பாற்றியதும் நாடார் மக்களே! என்பதை நினைவில் வைக்கவில்லை! மன்னர். அக்குடும்பங்களுக்கு மட்டும் செல்வத்தையும், பட்டங்களையும் மட்டும் வழங்கிவிட்டு, பிற நாடார் மக்களைத் தனது தீவிர எதிரிகளாகவே நடத்தினார்! மார்த்தாண்ட வர்மா.

இம்முறை நம் தாக்குதலில் மார்த்தாண்டவர்மா தப்பித்துவிட்டார்! என அறிந்த தம்பி சகோதர்கள் வருத்தமுற்றனர். ஆனாலும் மீண்டும் முயற்சிச் செய்ய முடிவெடுத்தனர். இம்முறை தக்கலை என்ற ஊரிலுள்ள பத்மனாபபுரம் அரண்மனையில் மன்னர் பஞ்சணையில் படுத்திருந்த வேளையில், பப்புத்தம்பி மன்னரைக் கொல்ல தன் வாளை வேகமாக ஓங்கினார். ஆனால் அவரது துர்பாக்கியம்! வாளானது, அரண்மனையின் மரத்தாலான மேல் உத்தரத்தில் மேற்கூரையில் உள்ள தூண் பகுதி சிக்கிக் கொண்டது. இந்த ஓசையில் துள்ளியெழுந்த மன்னர், தன் வாளை உருவி அக்கணமே பப்புத்தம்பியை வெட்டி வீழ்த்தினார். தன் அண்ணனைத் தன் கண்முன்னேயே கொன்ற மார்த்தாண்டவர்மாவைக் கொல்ல, வாளை ஓங்கினான் இராமன்தம்பி. அவனையும் வெட்டி வீழ்த்தினார்! மார்த்தாண்டவர்மா.

இந்தச் சதியில் நாடார்களுக்கும் தொடர்பிருக்கும்! எனத் தீவிரமாக நம்பினார் மன்னர். எனவே நாடார் மக்களின் மீது எல்லையற்ற அடக்குமுறைகளை ஏவினார்! மன்னர்.

தனக்குப் போட்டியாக இருந்த இரு சகோதர்களையும் மன்னர் கொன்றுவிட்டார். ஆனால் அச்சகோதர்களுக்கு “உம்மிணித்தங்கை'” என அழைக்கப்படும் “பாருகுட்டி” என்ற பேரழகியான தங்கை ஒருத்தியும் இருந்தாள். இவ்வேளையில் மார்த்தாண்ட வர்மாவுக்கு வலதுகரம் போலவும், படைத்தளபதியாகவும். இருந்தவர் “அனந்தபத்மநாடார்” என்பவர். ஆம்! மன்னரை எதிர்த்தவர்களும் நாடார்கள்; அவரை எதிரியிடமிருந்து காத்தவர்களும் நாடார்கள்; அவருக்குப் படைத்தலைவராக, உறுதுணையாக நின்றவரும் ஒரு நாடாரே. மிகச்சிறந்த வீரரான அனந்தபத்மநாடார், மன்னரின் உற்ற பாதுகாவலராகவும் இருந்தார். அவரும், பாருகுட்டியும் ஒருவரையொருவர் விரும்பினர்.

இவ்வாறிருக்க மன்னரும் தன் முறைப் பெண்ணான அவளை மணக்க நினைத்தார். அதை அவளிடமும் கூறினார்! மன்னர். மறுகணமே காளிதேவியைப் போல கடும் உக்கிரமடைந்தாள் உம்மிணித்தங்கை. என் உடன்பிறந்தவர்களைக் கொன்றுவிட்டு, என்னை மணக்கக் கேட்கும் உன் நாவை அறுக்கும் சக்தி எனக்கில்லை! ஆனால் உன் பார்வைப் பட்ட நான் இனி உயிருடன் இருக்கமாட்டேன்! என்றவாறே தன் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு, கிணற்றில் விழுந்து உயிரை விட்டாள்! தம்பி சகோதர்களின் பாசமான தங்கை.

இதனால் திகிலடைந்த மன்னருக்குப் பல மனநிலைப் பாதிப்புகள் ஏற்படவே, பயந்துபோன மன்னர், பூசாரிகளின் ஆலோசனைப்படி உயிரைவிட்டப் பெண்ணுக்குச் சிலைவடித்து, ஒரு கோயிலும் கட்டி, முறைப்படி பூசைகள் நடைபெறவும் வழிசெய்தார். அவ்வாறு உயிரைவிட்ட பெண்ணே மேலாங்கோடு இசக்கியம்மன் என்பர். மிகக் கொடூரமாக உயிரைவிட்டதால் மிக உக்கிரமான சிறு தெய்வமானாள்! அம்மாதரசி.

மார்த்தாண்ட வர்மாவின் அதர்மங்கள் தொடரும்…. வேணாட்டு மன்னர்களின் கொடுமைகள் நாடார் மக்களின் மீது எல்லை மீறிய வேளையிலேயே

ஐயா வைகுண்டர் அவதாரம் நிகழ்ந்தது.

ஐயா சிவசிவ! சிவசிவ! அரகர அரகரா!

__கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்.

இந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.

About hindusamayam

Read All Posts By hindusamayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *